வெளியிடப்பட்ட நேரம்: 07:37 (03/06/2017)

கடைசி தொடர்பு:07:55 (03/06/2017)

வாக்குப்பதிவு இயந்திர புகார் : தேர்தல் ஆணையத்தின் ஓப்பன் சேலஞ்ச் இன்று தொடக்கம்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டி வந்தது. இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துவந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சட்டப்பேரவையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிசெய்ய முடியும் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரப் பரத்வாஜ் நிரூபித்தார்.

EVM


இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. பிறகு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தேர்தல் ஆணையம். இதையடுத்து, 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முடிந்தால் ஹேக் செய்யுங்கள்', என்று அரசியல் கட்சிகளுக்கான ஓப்பன் சேலஞ்ச் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.


இதில் கலந்துகொள்ள விரும்பும் கட்சிகள், விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஓப்பன் சேலஞ்ச் நிகழ்ச்சி, இன்று காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. இதற்காக, காங்கிரஸ் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலா மூன்று பிரதிநிதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.