வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (03/06/2017)

கடைசி தொடர்பு:09:25 (03/06/2017)

'யாரும் நீக்கவில்லை... கட்சிப் பணியைத் தொடர்வேன்' : திகாரில் இருந்து வெளிவந்த தினகரன் அதிரடி!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார், டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர், அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது, கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடந்தது.  அதைத் தொடர்ந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

TTV Dinakaran


இதையடுத்து, நேற்று டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது, டெல்லி நீதிமன்றம். அவருடன் கைதான மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா இருவரும், ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

Dinakaran


இதைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருந்து இன்று காலை டி.டி.வி.தினகரன் வெளியில் வந்துள்ளார். பிறகு சென்னை புறப்பட்ட அவர், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "சிறையில் இருந்தபோது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மத்திய அரசுக்குப் பணிந்து தமிழக அரசு செயல்படவில்லை.


சென்னை சென்று, மீண்டும் எனது கட்சிப் பணியைத் தொடர்வேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.


கைதுசெய்யப்படுவதற்கு முன், கட்சியிலிருந்து விலகிவிட்டதாக தினகரன் கூறியிருந்தார். மேலும், சசிகலா, தினகரன் ஆகியோரை விலக்கிவைத்துவிட்டு ஆட்சியை நடத்துவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, கட்சிப் பணியைத் தொடர்வேன் என்று தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.