கூடங்குளம் முதல் கொவ்வாடா வரை... அணு உலை திட்டங்களும்! ஊழல்களும்! | From Koodankulam to kovvada, nuclear power plants and corruptions happening inside

வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (04/06/2017)

கடைசி தொடர்பு:10:29 (04/06/2017)

கூடங்குளம் முதல் கொவ்வாடா வரை... அணு உலை திட்டங்களும்! ஊழல்களும்!


கூடங்குளம்

தொடர்ந்து கூடங்குளத்துக்கு எதிராகக் குரல் எழுந்துகொண்டுதான் இருக்கிறது. மத்திய அரசும் முன்னரே திட்டமிட்டபடி அங்கே அணு உலைகளை நிறுவியபடிதான் இருக்கிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம்தான் 3-வது மற்றும் 4-வது அணு உலை அமைப்பதற்கான கான்கிரீட் அடித்தளங்களை அமைக்கத் தொடங்கியது. இதற்கிடையே கட்டுமானப் பணிகளுக்கு என ஏற்கெனவே மத்திய அரசு தரப்பிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு 142 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அடுத்தகட்ட அணு உலை அமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு. அதன்படி, 5-வது மற்றும் 6-வது யூனிட் அமைப்பதற்கான 50,000 கோடி ரூபாய்க்கான உடன்படிக்கையை ரஷ்யாவுடன் மேற்கொண்டுள்ளது

சூழலும்... ஊழலும்!

மற்றொரு புறம் '' அரசு பெரிய அளவில் நிதி ஒதுக்கி அடுத்தடுத்து யூனிட்டுகள் கட்டினாலும் எங்களுக்குத் தரவேண்டிய சொற்ப சம்பளத்திலேயே பெரும் ஊழல் நடக்கிறது” என்று புகார் அளித்துள்ளது உலையில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் தரப்பு. கூடங்குளத்தில் வேலைசெய்யும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான நாள்கணக்குச் சம்பளம் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படுகிறது. ஆனால், அவர்களுடைய ஏ.டி.எம் கார்டு அவர்களிடம் தரப்படுவதில்லை, வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணத்தில் பாதியை அந்தக் கார்டு வழியாகவோ, காசோலை வழியாகவோ ஒப்பந்தக்காரர்களே பெற்றுக்கொள்வதாக ஊழியர் தரப்புக் கூறுகிறது. இதுதவிர, மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூடங்குளத்தில் அவர்களின் அனுமதியுடன்தான் ஒப்பந்தப் பணியாளர்கள் உள்நுழைய முடியும். இதனைச் சாதகமாக்கிக்கொண்டு பாதுகாப்புப் படையினர் முறையாக அனுமதிபெற்ற ஒப்பந்த ஊழியர்களைக் கூட உள்நுழையவிடாமலும் வேலை செய்யவிடாமலும் அத்துமீறல்களை மேற்கொள்வதாகவும், இதனால் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது என்றும் கூறுகிறது ஊழியர்கள் தரப்பு. ​​​​​கூடங்குளத்தின் சூழலில் ஏற்கெனவே கேள்விக்குறியான சூழலில், அங்கே உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.  

குஜராத்தில் ஒரு நெடுவாசல்!

கூடங்குளமும் அதன் சூழலும் பற்றிக் குறிப்பிடும்போது  மிதிவிர்டி பற்றி குறிப்பிட்டாகவேண்டும். குஜராத்தின் பசுமைமிக்க கிராமங்களில் ஒன்று. கூடவே இயற்கை எரிவாயு மற்றும் அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிக்க கிராமமாக 2008-ல் அறிவிக்கப்பட்டது. மிதிவிர்டி மக்களுக்கோ, அணு உலை தவிர்த்து தங்களது கிராமத்தின் இயற்கை வளங்களே பிரதானமாக இருந்தது. 2015 அணு உலை அமைப்பதற்கான கோரிக்கைகள் அந்தக் கிராமத்தினர் முன்பு வைக்கப்பட்டபோது திட்டத்தை எதிர்த்தார்கள். இதற்கு, சுற்றியிருக்கும் ஐந்து தாலுக்காக்களிலும் சுற்றுச்சூழல் பாதிப்படையும். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கும் என்பதுதான் அவர்கள் கூறிய காரணம். எதிர்ப்பின் பலனாகத் தற்போது அணு உலை அமைக்கும் பணிகள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளன. 

கொவ்வாடா

அண்டை மாநிலத்தில் அணு உலை! 

அங்கே நிறுத்தப்பட்டால் என்ன? கூடங்குளம் இருக்கும் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் அதனை நிறுவிக்கொள்ளலாம் என்று அம்மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கொவ்வாடா கிராமத்துக்குத் தனது திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. மாநில அரசு நிலத்தில்தான் பெரும்பாலும் உலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதால், நிலத்தைப் பெறுவதில் எவ்விதச் சிக்கலும் ஏற்படவில்லை. ஸ்ரீகாகுளம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனால் ஏற்படும் பாதிப்பு கருதி இந்தத் திட்டத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்னும் அனுமதி அளிக்கப்படாத இந்தத் திட்டத்துக்கு, கட்சியினர் எதிர்ப்புத்தான் இருக்கிறதே தவிர, மக்கள் எதிர்ப்பு இதுவரை எதுவுமில்லை என்பதால், திட்டத்தைத் தொடருவோம் என்றும் அறிவித்துள்ளது மாநில அரசு. ஆனால், மக்கள் எதிர்ப்பு இருந்தது, பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு ஏக்கருக்கு தலா 33 லட்ச ரூபாய் தருவதாகக் கூறியுள்ளதே உண்மை நிலவரம்.  

இயற்கைவளம் அழியக்கூடாது என்பதற்காகக் குஜராத்தில் அணு உலை கட்டமைப்பு நிறுத்தப்பட்டது மகிழ்ச்சியான செய்தி. மாற்றாகத் தென் மாநிலங்களின் ஏதோ ஒரு கிராமத்தின் வளங்கள் அழியப் பார்த்துக் கொண்டிருக்கப்போகிறதா மத்திய அரசு? கூடங்குளமும் கொவ்வாடாவும் ஒரே மாதிரியான சூழலில் சிக்கிவிட்டிருக்கிறது. ஆம்! தென் மாநிலங்களே தொடர்ந்து அணு உலைகளுக்கான களங்களாவதும், மீத்தேன், நியூட்ரினோ, இயற்கை எரிவாயு எனச் சூழலுக்கு எதிராகச் சுரண்டப்படும் நிலங்களாகவும் ஆகிவிட்டிருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்