பாகிஸ்தானுக்கு குட்டுவைத்த சுஷ்மா சுவராஜ்! | Pakistan cannot take Kashmir issue to International Court, Sushma Swaraj

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (05/06/2017)

கடைசி தொடர்பு:17:43 (05/06/2017)

பாகிஸ்தானுக்கு குட்டுவைத்த சுஷ்மா சுவராஜ்!

காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

Sushma Swaraj

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவை விடுவிக்கக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இதை காரணம் காட்டி காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்று கூறப்படுகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் அல்லாத மூன்றாவது தரப்பு தலையீட்டை, இந்தியா விரும்பவில்லை. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், 'காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண பாகிஸ்தான், சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியாது. இரு நாடுகள்தான் இந்தப் பிரச்னை குறித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், தீவிரவாதம் இருக்கும் போது அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேச முடியாது' என்று கறாராக கூறியுள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் தரப்பு எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடவில்லை.