வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (05/06/2017)

கடைசி தொடர்பு:21:09 (05/06/2017)

மிசோரமில் ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்துவதில் சிக்கல்!

GST tax

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரி, இந்தியா முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்தப் புதுவித வரிவிதிப்பின் மூலம், நாடு முழுவதும் ஒரே வகையிலான வரிவசூல் நடக்கும் என்று அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து ஜி.எஸ்.டியை அமல்படுத்த பேச்சுவார்த்தைகளும், சட்ட நடைமுறைகளும் நடந்துவந்த நிலையில், அனைத்துக் கட்ட நடவடிக்கைகளும் நிறைவு பெற்று வரும் ஜூலை 1-ம் தேதி முதல், இந்த வரி அமலுக்கு வருவதாக இருந்தது. 

இந்நிலையில், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், ஜி.எஸ்.டியை அனைத்து இந்திய அளவில் அமல்படுத்த கால நிர்ணயம் விதிக்கப்பட்டிருந்த ஜூலை 1-ம் தேதிக்குள், அமலுக்குக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு இணைய சேவை மிகவும் மெதுவாக இருப்பதால், புது வரிக்குத் தேவையான அடிப்படை மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இது குறித்து மிசோரம் மாநிலத்தில் வரித்துறை அமைச்சர் லால்ஸ்வதா, 'வரும் ஜூலை 1-ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த அனைத்துக்கட்ட முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இணைய சேவை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, மற்ற வட கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.