வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (06/06/2017)

கடைசி தொடர்பு:13:11 (06/06/2017)

பிரதமர் மோடியின் இமயமலை நாட்களும்... 4000 நறுமண மரங்களும்... அதிகரிக்கும் விவசாய தற்கொலைகளும்!

 

நரேந்திர மோடி

“இந்தாண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருள் ‘இயற்கையுடன் மக்கள் இணைவோம்’ என்பது. இயற்கையுடன் இணைவோம் என்றால், நாம் நம்முடன் ஒன்றிணைவது” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக சுற்றுச்சூழல் தினத்துக்காக வழங்கிய செய்தியில், தத்துவார்த்தமாகப் பேசினார். மேலும் அவர், “இந்த நாளில் இயற்கையைக் காக்க நமக்குள்ள பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம். இந்தக் கிரகத்தை இன்னும் அக்கறையுடன் காப்போம்” என்றார். இது மட்டுமல்ல, சென்ற வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்ததை அடுத்து, நம் பிரதமர் இவ்வாறாகச் சொன்னார், “நாளைய தலைமுறையின் ஆரோக்கியத்தை, நல்வாழ்வை பறிக்கும் உரிமை நம் தலைமுறைக்கு இல்லை”. வார்த்தைகளாக, நம் பிரதமரின் சூழலியல் அக்கறை வியக்க வைக்கிறது. அடர் வனத்தின் ஓடையில் அமர்ந்து, தூய்மையானக் காற்றை நுரையீரல் முழுவதும் படரவிட்டதுபோல இருக்கிறது; சிலிர்க்கிறது. ஆனால், நிஜத்தை, அரசாங்கக் கொள்கைகளைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், அந்த சிலிர்ப்பு அடங்கி நடுக்கம்தான் மேலோங்குகிறது. 'நாளைய தலைமுறையின் ஆரோக்கியத்தை, நல்வாழ்வைப் பறிக்கும் உரிமை நமக்கு இல்லை' என்கிறார் பிரதமர். ஆனால், அவர் அனுமதி அளித்திருக்கும் திட்டங்கள் அனைத்தும் அதற்கு முரணானவையாக இருக்கின்றன.

பிரதமரின் இமயமலை நாட்களும்,4,000 நறுமண மரங்களும்...!

நம் பிரதமர் தன் இளமைக் காலத்தை இமயமலையில் கழித்தவர். அங்குள்ள குன்றுகளில், குகைகளில் அமர்ந்து ஞானத்தை நோக்கிப் பயணித்தவர். இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னை விடவும், படித்துக் கொண்டிருக்கும் உங்களைவிடவும், நம் பிரதமருக்கு இமயமலையைப் பற்றி நன்றாகத் தெரியும்... அதன் முக்கியத்துவம் நன்கு புரியும். ஆனால், அவரேதான்  இன்று அந்த மலையின் மீதுள்ள அரிய மரங்களின் மீது ஒரு போர் தொடுத்திருக்கிறார்.

கேதர்நாத்

உத்தரகாண்ட் மாநிலத்தின் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதிகளை இணைப்பதற்கு வசதியாக சாலைகள் அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறார். சாலைகள் வளர்ச்சிதானே... சாலைகள் வந்தால் பொருளாதாரம் வளரும்தானே...? எப்படி சாலைகள் அமைப்பது இயற்கையைப் பாதிக்கும் என்கிறீர்களா...? இந்த சாலைகள் எல்லாம் கடல்மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் உள்ள பகுதிகள், புவியியல் ரீதியாக வளமான அதே சமயம் பலவீனமான பகுதிகள். இந்த பகுதிகளில் சாலைகள் அமைப்பதால், புவியியல் ரீதியாக மிகப்பெரிய சேதம் உண்டாகும். அதுமட்டுமல்ல... இந்தப் பணிக்காக 4,000 நறுமண மரங்களை வெட்ட வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு. இந்த மரங்கள் எல்லாம் 100 ஆண்டுகள் பழைமையான மரங்கள். மரங்களை வெட்டி, சாலைகள் அமைக்க மலைகளைக் குடைந்து, கற்குவியல்களை எடுத்துச் செல்லும்போது... அந்த பகுதியின் சூழலியலே மூச்சுத் திணறும். அதுவும் குறிப்பாக அந்தப் பகுதியின் வளமான ஆற்றுப் படுகையின் ஆன்மா மெல்ல அழியும். 

ரயிலில் ஒரு அழிவுப் பயணம்

இமயமலை

இதே பகுதிகளுக்கு ரூ. 40,000 கோடி செலவில் ரயில் பாதையையும் அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. 3,000 கி.மீ நீளமான இந்த ரயில் பாதைக்காக மலைகளையும், பெரும் பரப்பிலான காடுகளையும் அழிக்க வேண்டும். ஏற்கெனவே, அந்தப் பகுதிகளில் உள்ள காடுகள் அழிந்து, பனிமலைகள் உருகி அழிவை நோக்கி வேகமாக பயணித்திருக்கும்போது... இந்த ரயில் பாதையும், பயணமும் அழிவைத்தான் வேகப்படுத்துமே தவிர, எந்த நன்மையும் பயக்காது. ஏதோ ஒரு பகுதிதானே அழிகிறது, நாம் எங்கோ தொலைவில் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என்று நினைப்போமானால், நம் வயிற்றில் நாமே புற்று வைத்துக் கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். ஆம், தொலைநோக்கில் பார்த்தால், இது அந்தப் பகுதிக்கான அழிவாக மட்டும் இருக்காது... இமயமலையில் ஏற்படும் சிறு உராய்வும் இந்த கண்டத்தையே பாதிக்கும். 

நதி இணைப்பா... நாசத்தின் அழைப்பா...?  

மத்தியப் பிரதேசத்தின் பந்தல்கந்த் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாசனம் செய்வதற்காக கென் - பெட்வா நதிகளை இணைக்கத் திட்டமிடுகிறது அரசு. இந்த நதிகளை இணைத்தால், லட்சக்கணக்கான ஏக்கர் பாசனப் பரப்பு அதிகரிக்கும் என்பதோடு, இதனை வளர்ச்சியின் திட்டமாகப் பார்க்கிறது அரசு. ஆனால், உண்மையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 18 லட்சம் மரங்கள் வெட்டப்படும், பன்னா புலிகள் காப்பகத்தின் 5 ஆயிரம் ஹெக்டேர்  பகுதி நீரில் மூழ்கும். அந்தப் பகுதி நீரில் மூழ்கும் பட்சத்தில், 1,255 அரியவகை மூலிகை செடிகள், 280 பறவை இனங்கள், 34 பாலூட்டிகளின் வாழ்க்கை இருப்பு கேள்விக் குறியாகும்...? 

உணவுச் சங்கிலியில், மனிதன் மேலே இருப்பதால்... எல்லாவற்றையும் அவன் ஆளலாம், அழிக்கலாம் என்று அர்த்தம் இல்லை. அவன் மேலே இருக்கிறான்; அதனால், அவனுக்குத்தான் அதிகப் பொறுப்பும் இருக்கிறது. மரங்கள் அழிந்து, பறவைகள் இல்லாமல்போனபின் அதன்பிறகு எத்தனை ஆண்டுகள் மனிதன் வாழ்ந்துவிட முடியும்...? இந்த நதிகள் இணைப்பு... நிச்சயம் நாசத்தின் இணைப்பாகத்தான் இருக்கும்.

சூழலியல் கேடும், விவசாயத் தற்கொலைகளும்!

இது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சூழலியல் கேடாக எண்ணி சுலபமாகக் கடந்து சென்றுவிட முடியாது. ஆம், இந்த சூழலியல் கேட்டுக்கும் நம் உணவுத் தட்டுக்கும் நேரடியானத் தொடர்பு இருக்கிறது. பெரும் திட்டங்களுக்காக ஒவ்வொரு முறை காடு அழிக்கப்படும்போதும், 'வெட்டிய மரங்களுக்கு ஈடான மரங்கள் நடப்படும்' என்கிறது அரசு. ஆனால், பெரும்பாலும் இது தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. ஏற்கெனவே நாம் சூழலியல் கேடுகள் மிகுந்து இருக்கும் யுகத்தில் வாழ்கிறோம்... இவை ஏற்கெனவே போதுமான அளவுக்கு வறட்சியைக் கொண்டுவந்துவிட்டது. இந்த வறட்சியும், அனல் காற்றும் 9,000 மக்களை கொன்று இருக்கிறது. 3 லட்சம்  விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள காரணமாகவும் இருந்திருக்கிறது. ஏற்கெனவே, தமிழகத்தில் 90 சதவிகிதம் விவசாய உற்பத்தி குறைந்துவிட்டது என்று புள்ளிவிபரங்கள் புலம்புகின்ற இந்தத் தருணத்தில், மேலும் மேலும் காடுகளை அழிப்பது, பெரும் பஞ்சத்துக்குத்தானே கொண்டு செல்லும்?

அப்படியானால், வளர்ச்சி வேண்டாமா...? வளர்ச்சி வேண்டும்தான். அதைவிட முக்கியமாக நமக்கு வாழ்க்கை வேண்டும். உணவு வேண்டும். எல்லாவற்றையும் அழித்தப் பின் எதனுடன் நாம் வாழ முடியும்...? அண்மையில், இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்குடன் உரையாடிக் கொண்டிருந்தபோது சொன்னார், “மனிதனின் மூளையில் ஏற்பட்ட வறட்சிதான் இந்த வறட்சிக்கு காரணம். அவன் மூளை வறண்டுவிட்டது. எந்த ஈரமும் இல்லாமல், காடுகளை அழிக்கிறான், மரங்களை வெட்டுகிறான், நீர் நிலைகளை நாசமாக்குகிறான். நதிகளை இணைப்பதைவிட மனித மனங்களை நீர் நிலைகளுடன் இணைக்க வேண்டும்” என்றார். 
 
நரேந்திர மோடியும் இதையேதான் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். ஆனால், ராஜேந்திர சிங்  வார்த்தைகளுடன் நில்லாமல், இறந்துபோன நதிகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நம் பிரதமரோ வார்த்தைகளுடன் மட்டும் தேங்கிவிடுகிறார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்