கர்ப்பிணியை உயிருடன் எரித்து ஆணவக் கொலை செய்த குடும்பம்!

கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை எரித்துக் கொன்ற குடும்பத்தைக் காவல்துறை கைது செய்துள்ளது.

karnataka
 

கர்நாடகாவின் பிஜபூர் மாவட்டத்திலுள்ள குண்டகனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பானு பேகம். இவர் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பானு பேகம் சரணப்பா என்னும் இளைஞரைக் காதலித்துள்ளார். பானுவின் காதலை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, வீட்டுக்குத் தெரியாமல் சரணப்பாவை கோவாவில் திருமணம் செய்து கொண்டார் பானு. 

தலைமறைவாக வாழ்ந்து வந்த பானு, கர்ப்பம் அடைந்ததும் தன் கிராமத்துக்குத் திரும்பியுள்ளார். குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையில் வீடு திரும்பிய பானுவுக்குப் பெரும் அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ’பானு பேகம் வீட்டில் அவரின் காதலை ஏற்று கொள்ளவில்லை. வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் முடித்து, கர்ப்பிணியாக வீடு திரும்பிய பானுவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சரணப்பன் வீட்டிலும் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. சரணப்பா வேறு மதம் மற்றும் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை விட்டுவிட்டு வரும்படி பானுவின் குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களின் பேச்சைப் பானு ஏற்க மறுத்துவிட்டார். கோபமடைந்த பானுவின் குடும்பத்தினர் அவரைக் கத்தியால் குத்தி எரித்துக் கொன்றுவிட்டனர். சரணப்பா படுகாயங்களுடன் காவல்நிலையம் வந்து நடந்தவற்றை விவரித்தார். பானுவின் தாய், தங்கை மற்றும் மாமனார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பானுவின் சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர்’ என்று கூறினர். 

கர்ப்பிணிப் பெண்ணை மிக கொடூரமாக ஆணவக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!