வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (07/06/2017)

கடைசி தொடர்பு:18:49 (07/06/2017)

மாட்டிறைச்சித் தடை எதிரொலி... மேகாலயாவில் இழுத்து மூடப்பட்ட பா.ஜ.க அலுவலகம்!

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து மேகாலயாவில் உள்ள பா.ஜ.கவினர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பா.ஜ.க அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பாஜக

கோப்பு படம்

சந்தைகளில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத்  தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இறைச்சி உண்ணும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாட்டிறைச்சியை அதிகம் பயன்படுத்தும் மேகாலயாவில், மத்திய அரசின் அறிவிப்புக்கு கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் உள்ள பெரும்பாலான மக்கள் மாட்டிறைச்சி உண்பதால், மத்திய அரசின் தடையை எதிர்த்து, பெர்னார்ட் மராக் என்ற பா.ஜ.க நிர்வாகி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று பா.ஜ.கவில் உள்ள மற்றொரு முக்கிய நிர்வாகி பச்சு மராக், தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.கவில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். பச்சு மராக்கின் ராஜினாமாவைத் தொடர்ந்து சுமார் 200 தொண்டர்கள் இன்று பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், அவர்கள்  மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்த கொடியை அகற்றியதோடு, அலுவலகத்தையும் இழுத்து மூடியுள்ளனர்.