வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (08/06/2017)

கடைசி தொடர்பு:17:58 (08/06/2017)

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? பி.ஜே.பி-காங்கிரஸ் தீவிரம்

குடியரசுத்தலைவர் மாளிகை

ந்தியா முழுவதும் உள்ள அரசியல்கட்சிகள் மற்றும் மக்கள் அனைவரும் எதிர்பார்த்த குடியரசுத்தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரணாப் முகர்ஜி குடிரயசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு பதவியில் இருந்தது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றது. இதையடுத்து, தற்போது புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 17-ம் தேதி குடிரயரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். "ஜூலை 17 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நாடாளுமன்ற வளாகத்திலும், மாநிலத் தலைநகரங்களில் உள்ள தலைமைச்செயலகங்களிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள்.

எம்.எல்.ஏக்களுக்கும், எம்.பி.க்களுக்கும் வெவ்வேறு விகிதங்களில் வாக்குகள் நிர்ணயிக்கப்படும். அதாவது, அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, எம்.எல்.ஏக்களுக்கான வாக்குகள் இறுதிசெய்யப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும், மாநிலங்களவை உறுப்பிபனர்கள் 233 பேரும் ஆக மொத்தம் 776 எம்.பி.க்கள் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேங்களில் மொத்தம் 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். குடியரசுத் தலைவரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். மக்களவையில் இரண்டு பேர், மாநிலங்களவையில் 12 பேர் நேரடியாக நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அவர்களுக்கு இத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், எம்.எல்.ஏக்களின் வாக்குகளையும், எம்.பி.க்களின் வாக்குகளையும் சேர்த்து வரும் விகிதம், எதிர் வேட்பாளரின் விகிதத்தை விட அதிகம் இருக்க வேண்டும் என்பது விதி. இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக வரவிருக்கும் தேர்தல் அமையும் என்று கருதப்படுகிறது.

ஆளும் பி.ஜே.பி சார்பில் நிறுத்தும் வேட்பாளரை எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட இதரக் கட்சிகள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. பி.ஜே.பி சார்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதும் கடினமான சவாலாகவே அமையும். அதேநேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து, சோனியா காந்தி ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் யாரை வேட்பாளராக பி.ஜே.பி. நிறுத்தப்போகிறது என்பது தொடர்ந்து சஸ்பென்ஸாகவே இருந்து வருகிறது. தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்துவரும் திரெளபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்து, காங்கிரஸின் எதிர்ப்பை சமாளித்து விடலாம் என்று பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது. என்றாலும், அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி இன்னமும் அறிவிக்கவில்லை. மேலும், தற்போது மத்திய அமைச்சராக உள்ள எம்.வெங்கய்ய நாயுடுவை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்துவது பற்றியும் பி.ஜே.பி தீவிரமாக ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிகிறது. மத்திய அரசின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர், காங்கிரஸ் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது பற்றி அக்கட்சி முடிவு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற மக்களவையில் போதிய பலம் பெற்றிருந்தாலும் மாநிலங்களவையில் அக்கட்சி அ.தி.மு.க போன்ற சில மாநிலக் கட்சிகளின் ஆதரவையே நாட வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் கட்சியோ அல்லது அந்தக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளோ இதுவரை பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டிருந்ததால், ஆளும்கட்சி வேட்பாளரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ஆனால், இந்தமுறை நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.

குடியரசுத் தலைவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினாலும், பல நேரங்களில் அது சாத்தியமாகாமல் போய் விடுகிறது. பெரும்பாலும் இருமுனைப் போட்டியே  நிலவிவந்துள்ளது. இந்த முறையும் இருமுனைப்போட்டி நிலவுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இம்மாத இறுதிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், பி.ஜே.பி-யானாலும், காங்கிரஸ் கட்சியானாலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் வாக்குகள் தவிர்த்து, பிஜூ ஜனதா தளம், அ.தி.மு.க மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைக்கும் என்பதால், பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது ஏறக்குறைய உறுதிசெய்யப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும். எப்படியானாலும், புதிய குடிரயசுத் தலைவராகப் போவது யார் என்பது இம்மாத இறுதிக்குள் தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்