வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (08/06/2017)

கடைசி தொடர்பு:20:49 (08/06/2017)

செவ்வாய் கிரகத்தில் சிக்கிக்கொண்டவருக்கு சுஷ்மா ஸ்வராஜின் வைரல் பதில்!

'செவ்வாய் கிரகத்தில் சிக்கிக்கொண்டேன்..’ என ட்விட்டரில் கருத்துப் பதிவு செய்த நபருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில்தான் இன்றைய வைரல் ஹிட்.

சுஷ்மா ஸ்வராஜ்

உலகத் தலைவர்களுள் சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படுவோர் தரவரிசையில் டாப்-10 பட்டியலில் உள்ளவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். ட்விட்டரில் எவ்வித தயக்கமுமின்றி, பொறுமையுடன் ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிலளித்து வருபவர். வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டு தவிப்போர், பாஸ்போர்ட், விசா குளறுபடிகள், தூதரகப் பிரச்னைகள் என ஒரு ட்விட்டர் பதிவு செய்தால் போதும், உடனடியாக அதை விசாரித்து அதற்கு தகுந்த நடவடிக்கையும் எடுப்பவர் சுஷ்மா. 

இந்நிலையில், இன்று காலையில் கரன் சைனி என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவும், அதற்கு சுஷ்மா தந்த பதிலும்தான் இன்றைய வைரல் ஹிட். கரன் சைனி, ‘நான் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக்கொண்டேன். 987 நாள்களுக்கு முன்னர் மங்கள்யான் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட உணவுகள், தீரும் நிலையில் உள்ளது. மங்கள்யான் -2 எப்போது வரும்..?’ என பதிந்திருந்தார். இந்தப் பதிவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இஸ்ரோ ஆகியோரையும் அந்நபர் ‘டேக்’ செய்து இணைத்திருந்தார். பதிவிட்ட 2 மணி நேரத்திலேயே அந்தப் பதிவுக்கு சுஷ்மா பதிலளித்துள்ளார். அதில், ‘நீங்கள் செவ்வாய் கிரகத்திலேயே சிக்கியிருந்தாலும் அங்கிருக்கும் இந்தியத் தூதரகம் தங்களுக்கு உதவும்’ என பதிவிட்டிருந்தார்.

‘சுஷ்மா இருக்க பயமேன்’ என்ற அளவில் சுஷ்மாவின் பதில் இருந்ததாக நெட்டிசன்கள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். சுஷ்மா பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே சுமார் 5000 லைக்குகளை நெருங்கி ஹிட் அடித்துக்கொண்டிருந்தது அவரது பதில் ட்விட்.