40 ரூபாய்க்காக 3 ஆண்டுகள் போராடி நீதிமன்றத்தால் புகழப்பெற்ற 70 வயதுப்போராளி!

40 ரூபாய்

தனக்கு நிகழ்ந்தது அநீதி என நினைக்கும் எந்த ஒரு மனிதனும் கிடைக்கிறதோ இல்லையோ, இறுதிவரை நீதியைத் தேடுவான். இதன் சமீபத்திய உதாரணம் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த லேக்ராஜ். வெறும் 40 ரூபாய் பெனால்டியை எதிர்த்து, இந்த 70 வயது முதியவரின் நெடும்பயணம், தலைநகர் டெல்லியில் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 
 
தேசிய நுகர்வோர் ஆணையத்தில், கடந்த வார இறுதியில் இவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவரிடம் வசூல் செய்யப்பட்ட 40 ரூபாயைத் திரும்ப அளிக்கச் சொன்ன அந்தத் தீர்ப்பின் பின் மூன்றாண்டு நெடிய பயணம் இருக்கிறது. 

இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தை லேக்ராஜ், ஓர் எழுத்தாளர். இவர் அந்த மாநில வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டி விற்கப்படும் வீடுகளில்  ஒன்றுக்காக விண்ணப்பித்திருந்தார். அதன்படி இவருக்கு வீடும் ஒதுக்கித் தரப்பட்டது. அந்த வீட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய பிறகு, இதர செலவுகள் எனக் குறிப்பிட்டு 808 ரூபாய் கட்டச் சொன்னார்கள். அதே கடிதத்தில் 808 ரூபாயை உரிய நேரத்தில் கட்டாத காரணத்தால்,  40 ரூபாய் தண்டத்தொகையும் சேர்த்து 848 ரூபாய் கட்டச்சொல்லி லேக்ராஜுக்குத் தகவல் வந்தது.  

அந்தத் தொகையைக் கட்டவேண்டிய இறுதி நாள் இன்னும் இருக்கும் நிலையில், `ஏன் 40 ரூபாய் அதிகம் கட்ட வேண்டும்? முடியாது' என்று லேக்ராஜ் மறுத்தார். `உடனடியாகக் கட்டவில்லை என்றால் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை  வசதிகள் துண்டிக்கப்படும்' என வீட்டுவசதி வாரியத்திடமிருந்து தகவல் வந்தது. இதனால் உடனடியாக 848 ரூபாயைச் செலுத்திய லேக்ராஜ், சட்டரீதியான நடவடிக்கை எடுத்தார். 

`மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தமக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, 40 ரூபாய் அதிகம் வசூல் செய்துவிட்டனர்' எனப் புகார் அளித்தார். மிக மெதுவாக நடந்த அந்த விசாரணையின் தீர்ப்பு, 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது. `லேக்ராஜுக்கு  விற்கப்பட்டபோது வழங்கப்பட்ட வீடு ஒதுக்கீடு கடிதத்தில் உள்ள 'விதிகள் மற்றும் நிபந்தனை'களின் அடிப்படையில் தண்டத்தொகை பெறப்பட்டது தவறில்லை' என்று அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்பால் லேக்ராஜ் மேலும் மன உளைச்சல் அடைந்தார். காரணம், அப்படி ஒரு 'விதிகள் மற்றும் நிபந்தனைகள்' என்ற ஒன்றுகுறித்துத் தெரிவிக்கப்படவே இல்லை. அதன் பிறகு சிம்லாவில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.  அங்கும் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், 1,000 ரூபாய் தண்டமும் கட்டச்சொல்லி உத்தரவிட்டனர். இது அவரின் மன உறுதியைச் சிதைக்கவில்லை. மாறாக அதிகப்படுத்தியது. தனி ஒருவனாக அரசு நிர்வாகத்தின் அநீதியை எதிர்க்க இன்னும் தீவிரமாக முடிவுசெய்தார். 

சிம்லாவைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் ஆணையத்தில் இந்த ஆண்டு முறையீடு செய்தார். ஒருவழியாக டெல்லியில் லேக்ராஜின் போராட்டத்துக்கு முடிவு கிடைத்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கே.ஜெயின், எழுத்தாளர் லேக்ராஜை வெகுவாகப் புகழ்ந்தார். ``அவரின் மன உறுதியைப் புகழ சொற்களே இல்லை'' எனத் தெரிவித்த அவர், `இந்த வழக்கின் மூலம் அறிவார்ந்த ஒரு மூத்த குடிமகன் அடையாளம் காணப்பட்டுள்ளார். எவ்வளவு குறைவான பணமாக இருந்தாலும் உயர்ந்த அதிகாரப் பீடங்களுக்கு எதிராக வீடு கொடுக்காமல் அதைப் போராடிப் பெறுவதற்கும் பெரிய போர்க்குணம் வேண்டும். அது லேக்ராஜிடம் இருக்கிறது. மேற்படி தண்டம் செலுத்தவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. காரணம், அவரின் ஒதுக்கீட்டுக் கடிதத்தில் அப்படி ஒன்றைக் குறிப்பிடவே இல்லை. எனவே, அவரின் பணமான 40 ரூபாயையும் இவரின் சட்டப் போராட்டத்துக்கு ஏற்பட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாயையும் உடனடியாக வழங்க உத்தரவிடுகிறேன்' என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 

"இந்தத் தீர்ப்பின் மூலம் எனக்கான நீதி கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ள எழுத்தாளர் லேக்ராஜ், ``என் 70 வயதைக் கணக்கில்கொள்ளாமல் எனக்கு எதிராக வாதாடுவதற்கு, பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டெல்லியில் வழக்குரைஞரை நியமித்தது இமாச்சலப்பிரதேச மாநில வீட்டுவசதி வாரியம். `கேவலம் 40 ரூபாய்' என நினைக்கலாம். ஆனால், அது விலைமதிப்பில்லாத என் தன்மானத்தின் எண்கள்" என்றார் 70 வயதுப் போராளி லேக்ராஜ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!