Published:Updated:

``92,000 கோடி அபராதம்!" தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றிய நீதிபதிகள்

இவ்வழக்கின் முடிவை அறிவித்த உச்சநீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை நிராகரித்ததுடன் 92,000 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கணக்கில் காட்டாமல் ஈட்டப்பட்ட வருவாயை மறைத்த பாரதி ஏர்டெல், வோடோபோன்-ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது அரசு தொடுத்த வழக்கில் 92,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 14 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் முதல் தீர்ப்பில் 1.33 லட்சம் கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

ஜியோ
ஜியோ

நிறுவனங்களில் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் வாடகை, ஈவுத்தொகை, வட்டி வருமானம், நிலையான சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம், உரிமத்தின் மானியம் மற்றும் செயல்பாடு, தொலைத்தொடர்பு அல்லாத வருவாய்கள் போன்றவற்றைக் கணக்கிடப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue - AGR) வரையறையிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட 1.33 லட்சம் கோடி ரூபாய் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இவ்வழக்கின் முடிவை அறிவித்த உச்ச நீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை நிராகரித்ததுடன் 92,000 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பால் தொலைத்தொடர்புத் துறை கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதி ஏர்டெல்லின் செய்தி தொடர்பாளர், ``மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு 15 நிறுவனங்களோடு தொடங்கிய இவ்வழக்கின் தீர்ப்பானது தற்போது சந்தையின் இருபெரும் நிறுவனங்களை மட்டுமே பாதித்துள்ளது” என்று தெரிவித்தார்.