Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேமராக்கனவுகளோடு இருக்கும் பெண்களுக்கு இவர்தான் முன்மாதிரி! #Margaret_Bourke_White

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் கிடந்த மார்கரெட் புரூக் வொயிட் என்கிற மூதாட்டிக்கு அன்று வயது 67. பார்க்கின்சன் நோய் என்பது, மரபுவழி நோய்; நரம்பு மண்டலம் தாக்கப்பட்டு, நடக்க முடியாமல் மனரீதியிலான பாதிப்பும் கை நடுக்கமும் ஏற்பட்டு இறப்பை நோக்கித் தள்ளும் நரம்பு தொடர்பான கொடிய நோய். மார்கரெட் புரூக் வொயிட்டின் நடுங்கிய கைகள் சாதாரணமானவை அல்ல. மார்கரெட் புரூக் வொயிட்இரண்டாம் உலகப்போரில் கிலோகணக்கில் எடையுடைய கேமராவைத் தூக்கிக்கொண்டு, துப்பாக்கிக் குண்டுகளுக்கிடையில் படம்பிடித்த கைகள். அவர் எடுத்த புகைப்படங்கள், நூற்றாண்டின் வரலாற்றை நமக்கு இன்றும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

யார் இந்த மார்கரெட் புரூக் வொயிட் (Margaret Bourke White)?

1904-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூஜெர்சியில் பிறந்து வளர்ந்தார் மார்கரெட். அடிப்படையில் யூதரான இவரின் அப்பா ஜோசப் வொயிட்,  இயற்கையியலாளர்; பொறியாளர் எனப் பன்முகம்கொண்டவர். வீட்டையும் மார்கரெட்டின் அக்காவையும் தம்பியையும் தாய் கவனித்துக்கொள்ள, சுதந்திரமாக இயங்கிய மார்கரெட்டின் காலேஜ் ஹிஸ்டரி சற்றே நீளமானது. 1922-ம் ஆண்டில் விலங்கியல் துறையின் ஒரு பகுதியான  `Herpetology' (தவளைகள் மற்றும் ஊர்வன பற்றியது)  பிரிவை எடுத்த பிறகு, பல கல்லூரிகளுக்கு மாற்றலாகி ஒருவழியாக 1927-ம் ஆண்டில் பேச்சுலர் ஆர்ட்ஸ் பட்டத்துடன் வெளிவந்தவருக்கு, அப்போது திருமணமாகி விவாகரத்தும் முடிந்திருந்தது. 

கேமரா மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம்கொண்டிருந்த மார்கரெட், `FORTUNE' இதழில் இணையாசிரியர் மற்றும் புகைப்படக்காரர் என ஆறு வருடங்கள் இரட்டைச் சவாரி செய்துவிட்டு, `LIFE'  பத்திரிகையை அடைந்தார். முதல் இதழே இவரின் புகைப்படத்தைத் தாங்கி வந்த பிறகு, போர் புகைப்படக் கலையில் இறங்கினார்.

நியூயார்க்கின் பிரபலமான பத்திரிகைகளுள் `LIFE' என்னும் வார இதழும் ஒன்று. 1883-ம் ஆண்டில் நகைச்சுவை இதழாக தொடங்கப்பட்ட `LIFE' பத்திரிகையை, 1936-ம் ஆண்டில் `TIME' பத்திரிகையின் நிறுவனர் ஹென்ரி லூஸ் வாங்கி, புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரும் செய்திப் பத்திரிகையாக வெளியிட்டார். 1972-ம் ஆண்டு வரை வார இதழாகவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு 1978 - 2000ம் ஆண்டு வரை மாத இதழாகவும் வெளிவந்த `LIFE' இதழ், உலகின் புகழ்பெற்ற பத்திரிகையாக விளங்கியது.

மார்க்ரெட்

மிக முக்கியமான புகைப்படக்  கலைஞர்கள் பணியாற்றிய இந்தப் பத்திரிகையின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர்  மார்கரெட் புரூக் வொயிட்தான். 1936-ம் ஆண்டின் `LIFE' இதழின் முதல் பிரதியினுடைய அட்டைப்படத்தில் தொடங்கியது இந்த கேமரா பெண்ணின் அட்வெஞ்சர் பயணம்.

1939-ம் ஆண்டில் எர்ஸ்கின் கால்டுவெல் என்கிற நாவலாசிரியருடன் திருமணமாகி, நான்கு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ஜெர்மனி, இத்தாலி போன்ற பல நாடுகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். அங்கு நிலவிய சூழல்கள், நாஸிகளின் வதை முகாம்கள் எனப் பல நிகழ்வுகளைப் புகைப்படமெடுக்கத் தொடங்கியதுதான் இந்தப் பயணத்தின் முதல் இன்னிங்ஸ்.

அமெரிக்காவிலிருந்து சோவித் ரஷ்யாவுக்குள் அனுமதிக்கப்பட்ட முதல் புகைப்படக்காரரே மார்கரெட்தான். 1941-ம் ஆண்டில் சோவியத் சென்ற மார்கரெட், ஆண்கள் நுழையவே சிரமப்பட்ட துறையில் காலூன்றி, துப்பாக்கி முழக்கங்களுக்கிடையே கேமராவைத் தூக்கி ஓடிக்கொண்டிந்தார். ஜோசப் ஸ்டாலின் சிரிப்பது போன்று இவர் எடுத்த புகைப்படம் உலகப் பிரசித்தி.மார்க்ரெட்

அமைதி ஒப்பந்தத்தை மீறி மாஸ்கோவை ஜெர்மனி துவம்சம்செய்ததை, மெளன சாட்சியங்களாகப் பதிவுசெய்தார் மார்கரெட். அந்தப் புகைப்படங்கள்தான் உலகின் கண்களுக்கு அந்தக் கொடுமைகளைப் பறைசாற்றின.

அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்ற பயணத்தில்,  வடக்கு ஆப்பிரிக்கா, ஜெர்மனி, இத்தாலி என இரண்டாம் உலகப்போர் இவரின் கேமராவில் பதிவாகிக்கொண்டிருந்தது. இவையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் என நிகழ்ந்துவிடவில்லை. அமெரிக்கத் தூதரகத்தில் அகதியாக வாழ்ந்து, ஆர்டிக் கண்டத்துக்குத் தப்பியோடி, எங்கெங்கோ சென்றவரை ஒருவழியாக அமெரிக்க  ராணுவத்தினர் காப்பாற்றியபோது கேமராவைப் பிடித்துக்கொண்டு நின்றார். அந்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து `Dear Fatherland, Rest Quietly', என்ற புத்தகமாகக்கொண்டுவந்தார்.

`இந்தப் போர்களுக்கிடையில் கேமரா மட்டும்தான் எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. என் சுயத்துக்கும் மிருகத்தன்மைக்கும் பாலமாக இருந்தது இந்த கேமராதான்' என்ற மார்கரெட், அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார். காந்தி ராட்டையைச் சுற்றும் புகைப்படம் நமக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும். அது மார்கரெட் எடுத்ததுதான். காந்தி இறப்பதற்கு முன் அவர் அளித்த கடைசிப் பேட்டியைப் பதிவுசெய்த மார்கரெட்டுடன் அவரின் உரையாடலை, `காந்தி' திரைப்படத்தில் காணலாம்.

பேட்டி முடித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கும் காந்தியை, தொடர்ந்து படம்பிடித்துக்கொண்டிருக்கும் மார்கரெட் வொயிட்டிடம் காந்தி பேசும் காட்சி கவனிக்கத்தக்கது.

``நீ காரியவாதி.''

``இல்லை... நான் உங்க அபிமானி.''மார்க்ரெட்

``அது இன்னும் ஆபத்தானது. இந்த வயசான கிழவனுக்கு.''

இது ஒருவகையில் உண்மையும்கூட. `மார்கரெட்டின் மனநிலை பிற்காலங்களில் மிக இயந்திரமாக மாறிவிட்டது' என்ற விமர்சனம்கூட அவர் மீதுண்டு.

இந்தியாவைச் சுற்றிய மார்கரெட், அம்பேத்கர், நேரு, ஜின்னா என முக்கியத் தலைவர்கள் அனைவரையும் படம்பிடித்தார். சொல்லப்போனால், அந்நாளில் உலகம் முழுவதிலான முக்கியமான தலைவர்களைத் தன் கேமராவுக்குள் படம்பிடித்து வைத்திருந்தார்.

யோசித்துப்பார்த்தால், அந்நாளில் பலரும் முயன்றிருக்காதவற்றை அவர் புகைப்படக் கலையில் செய்திருந்தார். Eagles Eye View, Ariel View என ஆண்கள் எடுக்கத் தவறிய  முயற்சிகளையும் முன்னெடுத்தவர் மார்கரெட் புரூக் வொயிட்.

1974-ம் ஆண்டில் பார்கின்சன் தாக்கிய நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதி இயற்கை எய்திய இந்த இரும்புப் பெண்மணிக்கு, இன்று பிறந்த நாள் (ஜூன் 14)

இன்று கேமராவைத் தூக்கிக்கொண்டு கனவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம்  பெண்கள், மார்கரெட்டை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement