Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத்தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளர் சாத்தியமா?

குடியரசுத்தலைவர் மாளிகை

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தமாதம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

பி.ஜே.பி சார்பில் யார் வேட்பாளர் என்பது குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முதலில் ஆளும் கட்சி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும்; அதன்பின்னர் எதிர்க்கட்சிகளின் முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

ஆனால், ஆளும் பி.ஜே.பி-யோ, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு-வை வேட்பாளராக களமிறக்க பி.ஜே.பி முடிவெடுத்திருப்பதாக பரவலாக தகவல்கள் வெளியான போதிலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு போன்றோரின் பெயர்களும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. எனினும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆளும் தரப்பிலோ, எதிர்க்கட்சிகள் தரப்பிலோ எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆளும் பி.ஜே.பி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் சார்பில் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்குழுவில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா, திருணாமூல் காங்கிரஸின் டெரக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் படேல் ஆகியோரும் எதிர்க்கட்சிகள் சார்பிலான குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் ஜூன் 14-ஆம் தேதி (இன்று) கூடி பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள ஒருவரையே வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒருவரை அறிவிக்கும்பட்சத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அந்த வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள். எனவே, காங்கிரஸ் தரப்பிலோ, அல்லது பொதுவான நபரையோ எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, பொதுவேட்பாளர் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆளும் அ.தி.மு.க-வின் இரு அணிகளுமே இதுவரை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க-வோ, குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து, கட்சியின் உயர்நிலைக் குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

எனினும் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தே அனைத்துக் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை இறுதி செய்யும் என்பதால்,குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே, தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close