Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் கனவை நிறைவேற்றுவாரா சோனியா?!  - எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் அமித் ஷா

பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது ஆளும் பா.ஜ.க. 'எங்கள் வேட்பாளர் உறுதியாக வெல்வார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் வேட்பாளர் தேர்வு அமைய வேண்டும் என விரும்புகிறார் பிரதமர் மோடி' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடக்க இருக்கிறது. வேட்பாளரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தரப்பிலும் ராஜ்நாத் சிங், வெங்கைய நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் அடங்கிய குழு, வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், வரும் வெள்ளியன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசவுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.

"நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத் தீர்மானிக்கும் வகையில் எங்கள் அணிக்குப் போதிய பலம் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தருவதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துவிட்டார். அவருடைய ஆதரவைக் கணக்கிட்டாலே, 50 சதவீதம் வாக்குகள் வருகின்றன. தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதியின் சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களும் பா.ஜ.கவை ஆதரிக்க உள்ளனர். சிவசேனா எதிர்ப்பு காட்டினால், சரத் பவாரின் ஆதரவைப் பெறவும் பா.ஜ.க தலைமை தயாராக உள்ளது. எப்படிப் பார்த்தாலும், பா.ஜ.க முன்னிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவார். ஆனால், இந்த வெற்றியை வேறு கோணத்தில் மாற்றுவதற்கு பிரதமரும் அமித் ஷாவும் விரும்புகின்றனர்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

" பிரதமருக்கு எதிராக காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள், ஒரே அணியில் திரளக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ' மோடியின் பலத்தைக் குறைக்க வேண்டும்' என இவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இவர்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டால், 'அது தன்னுடைய ஆட்சிக்கான கூடுதல் பலமாக இருக்கும்' என மோடி கருதுகிறார். அதையொட்டியே, ராஜ்நாத் சிங்கை அனுப்பி சோனியா காந்தியுடம் பேச வைக்கவுள்ளார். ' நாங்கள் மிகவும் பின்தங்கிய ஒரு சமூகத்தின் வேட்பாளரை நிறுத்தினால், உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அவருக்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா? ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமில்லாமல் அரசியலுக்கு இடம் கொடுக்காமல் குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய இருக்கிறோம். எங்கள் முயற்சிக்கு உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறோம்' என்பதைத்தான் இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது பா.ஜ.க.

'இதற்கு காங்கிரஸ் தரப்பின் பதில் என்னவாக இருக்கும்?' என்பதற்கான விடை ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, தன்னுடைய இமேஜை அகில இந்திய அளவில் உயர்த்திக் கொள்ளும் முடிவில் இருக்கிறார் பிரதமர் மோடி. அதையொட்டியே, எதிர்க்கட்சிகளும் தன்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்விதமாக திட்டமிட்டு வருகிறார். எதிர்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், ' பழங்குடியினப் பெண்ணான திரௌபதி மர்மு முன்னிறுத்தப்படுவாரா அல்லது அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் நிறுத்தப்படுவாரா?' என்பது பா.ஜ.க தலைமைக்கு மட்டுமே தெரியும்" என்றார் விரிவாக.  

தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். " அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க தலைமை கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் தேர்தலில், ' எதிர்க்கட்சிகள் ஒன்றாக அணி திரள வாய்ப்பு இருக்கிறதா?' எனவும் பார்க்கிறார்கள். மக்களவைத் தேர்தலைப் போல, அரசியல் கலப்போடு இந்தத் தேர்தலை அணுகுவதற்கு பா.ஜ.க தலைமை விரும்பவில்லை. அதிலும், தேசிய சிந்தனையுள்ள ஒருவரைத்தான் வேட்பாளராக முன்னிறுத்த முடியும். நாட்டின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற வேண்டும் என விரும்புகிறார் பிரதமர்" என்றார் உறுதியாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement