மாதவிடாய் என்பதால் ‘ஏ’ சர்டிஃபிகேட்!- சர்ச்சையில் மத்திய தணிக்கைக் குழு

மாதவிடாய் தொடர்பாக ’ஏ’ தணிக்கை பெற்றுள்ள புல்லு திரைப்படம்

‘மாதவிடாய்’ என்றால் என்னவென்றே தெரியாமல் வளரும் ஒருவனுக்குத் திடீரென்று திருமணம் நடக்கிறது. அவன் மனைவி அவன் அறியாத ‘நாப்கின்’ என்ற வஸ்து ஒன்றைச் சொல்லி வாங்கி வரச் சொல்கிறாள். அதை வாங்குவதற்காக ‘மெடிக்கல் ஷாப்’பிற்குச் செல்கிறான். அங்கே அவனுக்கும் கடைக்காரருக்கும் இடையே நிகழும் உரையாடல்...

அவன் : ஏன்யா! எப்பப் பார்த்தாலும் இதைக் கருப்பு கவரிலேயே சுத்தித்தர்ற?

கடைக்காரர் : இந்தியாவுல இருக்கிற எல்லா பொண்ணுங்களுமே இதைத்தான் உபயோகிக்கறாங்க. அவங்க யாருமே கேள்வி கேட்கல, நீ கேட்கிறியே!

அவன் : ஆனா எங்க வீட்டுப் பொண்ணுங்க யாரும் இதுவரை இத வாங்குனது இல்லையே...

‘புல்லு’ ஹிந்தி படத்தின் ‘ட்ரெய்லர்’ காட்சி இப்படியாக விரிகிறது. படத்தில், தன் மனைவியின் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காத கதாநாயகன், அவனே சானிட்டரி நாப்கினைத் தயாரிக்கிறான். அதோடு, நாப்கினை அதுவரை உபயோகித்து இருக்காத தன் சொந்த கிராமத்துப் பெண்களிடம் அதை எடுத்துச் சென்று எப்படி விழிப்புஉணர்வு ஏற்படுத்துகிறான் என்பதுதான் கதைச் சுருக்கம். 

இன்று வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தைத்தான், பிரச்னைக்குரியதாகச் சொல்லி மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு ‘அடல்ட்ஸ் ஒன்லி’ திரைப்படமாக அறிவித்துள்ளது. 

படத்தையே பார்க்கவில்லை!

14 நாள்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள இயக்குநர் அபிஷேக் “மாதவிடாய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் என் நோக்கம். அதற்காக,  இந்தப் படத்தை எல்லா தரப்புக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்பினேன். குறிப்பாக, இந்தப் படத்தை இளம்பிள்ளைகளைப் பார்க்க வைக்க வேண்டும்; பாலியல் கல்வியின் ஒரு பகுதியாக இந்தப் படத்தை மாணவர்களைப் பார்க்க வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், தணிக்கைச் சான்றிதழ் என் கனவுகளைக் கலைத்துவிட்டது. திரைப்படத் தணிக்கை குழுத் தலைவர் என் படத்தைப் பார்க்கவில்லை; பார்க்காமலே அதற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட சிஸ்டத்தை வைத்துக் கொண்டு, எந்த நூற்றாண்டில் நாம் பாலியல் கல்வியைக் கொண்டுவரப் போகிறோம்!” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது வாழ்வில் நடந்த சில அனுபவங்களையும், தான் முதன்முதலில் ‘நாப்கின்’ வாங்கச் சென்றபோது சந்தித்தப் பிரச்னைகளையும் சேர்த்தே படத்தில் பதிவுசெய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதும் தணிக்கை குழுவின் அலட்சியத்துக்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில், நடிகர் அக்‌ஷய் குமாரின் நடிப்பில் ‘பேட்மேன்’ என்ற பெயரில், மெகா பட்ஜெட்டில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் கதைக் கருவும் இதேதான். கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்... தன் மனைவிக்காக தானே நாப்கின் பேட் உருவாக்கியவர். அவரை 2014 ஆம் ஆண்டின் நூறு சிறந்த மனிதர்கள் பட்டியலில் ஒருவராகக் குறிப்பிட்டு ‘டைம்ஸ்’ பத்திரிகை கௌரவப்படுத்தியிருந்தது. அதே ஆண்டில் இந்திய அரசும் அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அவரது வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம்தான் ‘பேட்மேன்’. தற்போது ’புல்லு’ படத்துக்குத் திரைப்படத் தணிக்கைக் குழு, ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளதால், ‘பேட்மேன்’ படத்துக்கும் அதே நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் இருக்கிறது அந்தத் திரைப்படக்குழு. 

'புல்லு' படத்தின் டிரெய்லர்

 

 

 

 

 

லீனா மணிமேகலைமாதவிடாய் பற்றி பேசினால் அந்தத் திரைப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெறவேண்டுமா? கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை கூறுகையில், “கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இருந்த மூன்று படங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடையே செய்தார்கள். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையாகும் படங்களைத் தடுக்க அவர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை, ஆனால், அவர்களால் தடை செய்ய முடிகிறது. அதனால், இந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பதில் ஒன்றும் அதிசயமே இல்லை. முன்பெல்லாம் இயக்குநர்கள் திரைப்படம் எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்கள், தற்போதைய சூழலில் எப்படியெல்லாம் எடுத்தால் படத்தை வெளியிட முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அதிகாரம், கலையைக் கொலை செய்வது நேரடியாகவே நடக்கிறது. அதீத வன்முறை இருக்கும் படங்களுக்கு யூ சான்றிதழ் தரப்படுகிறது. ஆனால், மக்களுக்குச் சென்று சேர வேண்டிய படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்று கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. பனோரமா விருதுபெற்ற திரைப்படங்களைத் தூர்தர்ஷன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறது. ஆனால், என் ‘செங்கடல்’ திரைப்படத்தைத் தூர்தர்ஷன் பெற்றுக்கொள்ளவில்லை காரணம் அது ‘ஏ’ சான்றிதழ் பெற்றதுதான். சமூக அக்கறையில் வெளிவரும் எந்தக் கலை வழி ஊடகத்தையும் காயடிக்கிறார்கள். மோடியின் அடிமை என்று தன்னை வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டவர்தான் தற்போது தணிக்கை குழுவில் இருக்கும் பஹ்லஜ் நிஹ்லானி, உண்மையான கலை மற்றும் சினிமா ஆர்வம் மிக்கவர்கள் ஒன்றிணைந்து அவரைப் பதவி விலகச் செய்ய வைக்க வேண்டும், CBFC என்ற காலனிய அரசு தணிக்கை இயந்திரத்தின் எதேச்சதிகாரத்தைச் செயலிழக்க செய்ய வேண்டும். இல்லையெனில் இது போன்ற பிரச்னைகள் தொடர்ந்தபடிதான் இருக்கும்” என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!