ஆன்லைன் ஷாப்பிங் கணக்கெடுப்பு... மத்திய அரசின் முடிவு சரியா?

ஒவ்வொரு நாளும் ஆன்லைன் வர்த்தகத்தின் அளவு உயர்ந்துகொண்டேபோவதால், இந்திய அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள 'தேசிய மாதிரி கணக்கெடுப்பு' மூலம் இந்தியர்களின் ஆன்லைன் வர்த்தகம் குறித்து முழுமையாகத் தகவல்களைத் திரட்ட முடிவெடுத்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்

வாடிக்கையாளர்களின் நுகரும் பழக்கம் குறித்தும் அவர்களின் ஒவ்வொரு மாதச் செலவினத்தில் இணைய வர்த்தகத்துக்கு எவ்வளவு செலவுசெய்கிறார்கள் என்பது குறித்தும் கணக்கெடுக்க உள்ளனர். மத்திய புள்ளியியல் அமைச்சகத்தினால் நடத்தப்படவிருக்கும் இந்த ஆய்வு, வரும் ஜூலை மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜூலை வரை நடக்க இருக்கிறது.

இந்தக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டிலும் எப்படிச் செலவுசெய்கிறார்கள், அவர்களின் அன்றாடம் முதல் மாதந்திர செலவுகள் வரை துல்லியமாகக் கணக்கெடுக்க உள்ளனர். இது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் எடுக்கப்பட இருக்கின்றன. மாதிரிக் கணக்கெடுப்பின்போது 5,000 நகர்ப்புறப் பகுதிகளிலும் 7,000 கிராமப்புறப் பகுதிகளிலும் நடக்க உள்ளதாகவும், ஒரு லட்சத்து இருபதாயிரம் வீடுகளை நேரடியாக அணுகி எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது. 
 
இதுகுறித்து 'எக்னாமிக் டைம்ஸ்' இதழ் செய்தியாளர்களிடம் பெயர் குறிப்பிடாமல் பேசிய இந்திய புள்ளியியல் துறை அதிகாரிகள் ``இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் ஷாப்பிங் குறித்த தற்போதைய மதிப்பைவிட உண்மையான மதிப்பு அதிகமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர். 

நடப்பு ஆண்டிலேயே நாட்டில் அன்றாட வீட்டுப்பொருள்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2020-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 17 கோடியை எட்டிவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் ஆண்டு வர்த்தகம் நடந்துவருகிறது. ஆனால், இது ஏழு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் புழங்கும் இந்திய சில்லறை வர்த்தகத் துறையில் இது இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவான அளவுதான். ஆனால், ஆன்லைன் சில்லறை வர்த்தகம் வளர்ந்துவரும் வேகத்துக்கு இந்தக் கணக்கெடுப்பு தற்போது அவசியம் என, புள்ளியியல் துறை நினைக்கிறது. வரும் 2025 -ம் ஆண்டு இந்தியாவின் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா கணக்கிட்டுள்ளது. தொடரும் இணையப் பரவலாக்கலின் அடிப்படையில் இந்த இலக்கு இன்னும் விரைவாகவே எட்டப்படும் எனத் தெரிகிறது. 

அமெரிக்காவைத் தலைமையாகக்கொண்ட பாரிஸ்டர் ஆய்வு நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டில் அதாவது 2021-ம் ஆண்டுவாக்கில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இணைய வர்த்தகத்தினால் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஆசியாவிலேயே தற்போது சீனாதான் அதிக இணைய சில்லறை வர்த்தகம் நடைபெறும் நாடாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், தற்போது நடைபெறும் வர்த்தகம் என்பது மிகக்குறைவான அளவு எனக் குறிப்பிடும் அதே நேரம் சீனாவைவிட வேகமாக இணைய வர்த்தகம் பரவியும் வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு என்பது, தற்போதைய தேவை என்றாலும் வருங்கால வரிவிதிப்புகளுக்கு இது வழிவகுக்கும் என்றும், இது பொதுமக்களின் தலையில்தான் விடியும் என்றும் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், அரசோ `இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. அரசுக்கு நாட்டில் எத்தகைய வர்த்தகம் நடக்கிறது என்றும் சந்தை மதிப்பு குறித்த நிலவரமும் அவசியம் தெரிய வேண்டும்' எனப் புள்ளியியல் அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!