'20 போலி கம்பெனிகள்... 5000 பக்கக் குற்றப் பத்திரிகை' - மல்லையா இப்படித்தான் ஏமாற்றியிருக்கிறார்!

முடிந்தால் பிடித்துக் காட்டுப் பார்க்கலாம் என்று எவர் வேண்டுமானாலும் அரசுக்கு சவால் விடும் நிலையில்தான் மல்லையாவின் வழக்கு இருந்து வந்தது. ஆனால், அது இப்போது மாறி உள்ளது. விஜய் மல்லையா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மல்லையா

பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் மேலாகக் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் பிடிக்கப்படும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார். எங்கு போனார், என்ன ஆனார் வலை வீசி தேடிய பிறகு லண்டனில் இருப்பது தெரியவந்தது.

இந்திய அரசு இங்கிலாந்து அரசிடமும் பேசிப் பார்த்தது பயனில்லை. ஆனால் ஒருவழியாக அவரின் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தது லண்டன் நீதிமன்றம். 

இதற்கிடையில் அமலாக்கத்துறை கறுப்புப் பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீதான விசாரணையைத் தீவிரமாக்கி  குற்றப்பத்திரிகை தயார் செய்து சமர்ப்பித்தது. 5000 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில் 20 போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தனது நிறுவனச் சொத்துகளை முறைகேடாகக் கையாண்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. போலி நிறுவனங்கள் மட்டுமல்லாது அதன் இயக்குநர்கள், ஊழியர்கள் அனைத்துமே போலியானவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மல்லையா தனது பப்ளிக் லிமிட்டெட் நிறுவனங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புடைய ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துகளைக் கையாண்டு வந்திருக்கிறார். இவற்றை போலி நிறுவனங்கள் மூலமாகக் கணக்கில் காட்டாமல் நிர்வகித்து வந்துள்ளார் என்றும் அதில் சொல்லப்படுகிறது. கம்பெனி சட்டங்களில் உள்ள சிக்கலான வழிமுறைகளைப் பயன்படுத்தி சட்டத்தையும் அரசையும் ஏமாற்றி இருப்பதாக அந்தக் குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளது.  

இவை குற்றப்பத்திரிகையின் சில பக்கங்களில் சொல்லப்பட்டிருப்பவை மட்டுமே. இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அதன் பக்கங்களில் புதிய புதிய ஏமாற்று வித்தைகள், தந்திரங்கள் காணக்கிடைக்கலாம். மத்திய புலனாய்வு குழுவின் அதிரடி நடவடிக்கையால் மல்லையாவின் அனைத்து தகிடுதத்தங்களும் விரைவில் அம்பலப்படுத்தப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!