பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம்: அமலாகும் முதல் நாளிலேயே விலை குறைந்தது!

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையை தினமும்  மாற்றி அமைப்பதற்கு எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தன. அதாவது தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவது போல் பெட்ரோல், டீசல் விலையையும் தினசரி நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி மே 1-ஆம் தேதி முதல் இத்திட்டம் முதல்கட்டமாக, ஐந்து நகரங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெத்பூர், சண்டிகர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று முதல் தினசரி விலை நிர்ணயிக்கும் முறை நாடு முழுவதும் பொதுவாக அமலுக்கு வந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே பெட்ரோல் லிட்டருக்கு 1.12 ரூபாயும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 1.24 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02க்கும், டீசல் 57.41க்கும் விற்பனை செய்யப்படும். இந்த விலை ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு அறிவிக்கப்படும். அடுத்த நாள் காலை 6 மணி வரை அமலில் இருக்கும். ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு அறிவிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோல் பங்க்குகளிலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் fuel@IOC என்ற மொபைல் ஆப் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!