’தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமா?’ யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு

’கீதையும், ராமாயணமும் தான் இந்தியாவின் அடையாளங்கள். தாஜ்மஹால் எப்படி இந்தியாவின் அடையாளமாகும்’ என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் மூன்றாண்டு சாதனையைக் கொண்டாடும் வகையில் நாட்டின் பல இடங்களிலும் பாஜக-வினர் வெற்றி விழாவாக சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நேற்று மோடியின் மூன்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கினார்.

விழாவில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்களுக்கு பிரதமர் மோடி கீதை, ராமாயணப் புத்தகங்களை பரிசாக வழங்குவது சிறப்புக்குரியது. இதற்கு முன்னர் இந்தியத் தலைவர்கள் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு தாஜ்மஹால் சிலையையும், மினார் சிலைகளையும் பரிசாக வழங்குவர். இந்தியாவின் பாரம்பர்யத்துக்கும், கலாசாரத்துக்கும் பொருந்தாத தாஜ்மஹால் சிலையை எவ்வாறு பரிசாகக் கொடுப்பர். ராமாயணமும், கீதையும்தான் இந்தியாவின் அடையாளங்கள்’ எனக் கூறினார்.

இந்தியாவின் முக்கிய அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹால், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகச் சின்னமாகும். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டிய இந்தியாவின் முக்கிய இடங்கள் பட்டியலில் தாஜ்மஹாலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!