வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (19/06/2017)

கடைசி தொடர்பு:21:56 (19/06/2017)

யார் இந்த ராம்நாத் கோவிந்த்? #PresidentialElection

ராம்நாத் கோவிந்த்

பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஜார்க்கண்ட் கவர்னரான திரெளபதி முர்மூ என்றெல்லாம் பெயர்கள் அடிபட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத பி.ஜே.பி-யின் பரிட்சயமான முகம் அல்லாத ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது பி.ஜே.பி தலைமை. யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

ராம்நாத்வழக்கறிஞர் படிப்பை முடித்தவரும், பி.ஜே.பி-யின் நீண்ட நாள் உறுப்பினருமான ராம்நாத் கோவிந்த், இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர். தலித் தலைவர் என்ற தகுதிகளை உடைய ராம்நாத் கோவிந்தை, இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான பி.ஜே.பி வேட்பாளராக அமித்ஷா இன்று அறிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்ற அமைப்பின் மூலம் பி.ஜே.பி-யின் கொள்கைகளை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் பரப்பிவந்தவர்.

1998 முதல் 2002 வரை பி.ஜே.பி-யின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். 1994 - 2006-ஆம் ஆண்டுகள்வரை உத்தரப்பிரதேசத்தின் ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பி.ஜே.பி-யின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், ஆகஸ்ட் 8, 2015 முதல் பீகாரின் ஆளுநராக ஜனாதிபதி மூலம் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்.

லக்னோ அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும், கொல்கத்தா ஐ.ஐ.எம்-மிலும் பல்கலைக்கழகக் குழுவிலும் இடம்பிடித்துள்ளார் ராம்நாத் கோவிந்த். டிமானிடைஷேன் மூலம் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க முடியும் என்று மோடிக்கு முழு ஆதரவை வழங்கியவர். 2002 அக்டோபரில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் சார்பாக உரையாற்றியவர். 1971-ம் ஆண்டு பார் கவுன்சிலில் இணைந்த ராம்நாத் கோவிந்த், 1993 வரை உச்ச நீதிமன்றத்தில் 16 வருடங்கள் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாராளுமன்றக் குழுக்களில் உள்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன், பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் ஆணையம், சமூக நீதி மற்றும் மேம்பாடு, சட்டம் - ஒழுங்கு எனப் பல்வேறு குழுக்களில் பணியாற்றியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகத் தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். 

பி.ஜே.பி., இவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த இரண்டு காரணங்கள் முக்கியமாகக் கூறப்படுகின்றன. ஒன்று, அத்வானியை முன்மொழிந்தால் அவர்மீது உள்ள வழக்குகள் தடையாக வந்து நிற்கும் என்பதும், ஒரு தலித் தலைவரை முன்மொழிந்தால் எதிர்ப்புகள் பெருமளவில் எதிர்க்கட்சியிடமிருந்தும் இருக்காது என்பதுதான் பி.ஜே.பி-யின் யுக்தியாகக் கூறப்படுகிறது. என்னதான் செயலளவு அதிகாரங்கள்கொண்ட பதவி என்றாலும், இதுவரை பரிட்சயமில்லாத ஒருவரை பி.ஜே.பி வேட்பாளராக அறிவிப்பது அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் நபராக ராம்நாத் கோவிந்த் இருப்பார் என்பதே. கையெழுத்துத் தலைவராக மட்டும் இருப்பாரா... இல்லை, கடினமான முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பாரா இந்த ராம்நாத் கோவிந்த்?


டிரெண்டிங் @ விகடன்