வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (20/06/2017)

கடைசி தொடர்பு:15:36 (20/06/2017)

ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார் நிதிஷ்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்துக்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு திரட்டி வருகிறார்.

நிதிஷ் குமார்

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இதனிடையே பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். 71 வயதாகும் ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் ஆளுநராகப் பதவி வகித்துவருகிறார். இவர், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். வரும் 23 ஆம் தேதி, வேட்பு மனுத்தாக்கல்செய்கிறார். 

இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மனம் கவர்ந்த வேட்பாளராக உள்ளார் ராம்நாத் கோவிந்த். பீகாரின் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பணியாற்றியபோது, அவரின் சிறந்த பண்புகளையும் நிர்வாக நடைமுறைகளையும் அதிக அளவில் அறிந்துகொண்டுள்ளதாகக் கூறுகிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.

இதையடுத்து, ராம்நாத் கோவிந்த்துக்காக ஆதரவு திரட்டும் நோக்கில், ஜூன் 21 ஆம் தேதி ஐக்கிய ஜனதா தள தலைவர்களை ஒரு சிறப்பு அவசரக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் நிதிஷ்குமார். இந்தக் கூட்டத்தில், ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு திரட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.