வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (21/06/2017)

கடைசி தொடர்பு:16:10 (21/06/2017)

ஐ.டி. நண்பர்களே... பணி பாதுகாப்பு குறித்த பயமா... இதைப் படிங்க!

`அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐடி துறையில் இரண்டு லட்சம் பணிகள் காணாமல் போய்விடுமாம்' என்ன... பயந்துவிட்டீர்களா? இருக்கவேண்டியதுதான். இவ்வளவு நாளும் கைநிறைய சம்பளம் கொடுத்த துறையாயிற்றே பயம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் கவலை வேண்டாம். `வேலையைவிட்டு நீக்கப்படுபவர்கள் 50 சதவிகிதத்தினருக்கு வேறு வேலைகளில் நிச்சயம் வாய்ப்பு இருக்கும்' என்கிறது ஓர் ஆய்வு. 

ஐடி


சி.ஐ.இ.எல் மனிதவள சேவைகள் (CIEL HR Services) நிறுவனம், 50 ஐடி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளிடம் ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆட்டோமேஷன் காரணமாக வேலை பறிப்புகள் நடந்தாலும், வேலையை இழந்தவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லாமல்போய்விடாது. வேறு வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை நிறுவனங்கள் தருவதற்குத் தயாராக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளனர். 

எதிலெல்லாம் வேலை பறிப்பு இருக்கும்?

`எல்லா பிரிவுகளிலும் வேலை பறிப்பு நடவடிக்கை இருக்காது' எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், `ஐடி துறைகளில் ஐடி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சப்போர்ட், டெஸ்ட்டிங் மற்றும் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் போன்றவற்றில்தான் வேலை பறிப்பு நடவடிக்கைகள் அதிகம் இருக்கும்' என்கிறார்கள். 

வாய்ப்புள்ள புதிய துறைகள்!

`கணிசமான வேலை பறிப்புகள் வரும் காலத்தில் நடந்தாலும் க்ளவுட் கம்ப்யூட்டிங், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் உள்ளிட்ட துறைகளில் நிச்சயம் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்' என்பது ஐடி துறை நிபுணர்கள் கருத்து. மேலும், முக்கியமாக ரீட்டெய்ல் மற்றும் கன்ஸ்யூமர் பேங்கிங் பிரிவுகளிலும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாற்றங்கள் ஏற்கெனவே நடக்க ஆரம்பித்துவிட்டன. நிறுவனங்கள், புதிய ஊழியர்கள் மற்றும் எட்டு வருடங்களுக்குக் குறைவான அனுபவம்கொண்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், அதற்கு முன்னதாக அவர்களுக்கு வேறு பயிற்சிகளைத் தந்து வருவதாகவும் சொல்லப்படுகின்றன. எனவே, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்குச் சாதகமாகவுள்ள பிரிவுகளில் பணியாற்றத் தேவையான பயிற்சிகளை நிறுவனங்கள் வழங்கிவருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆட்டோமேஷன் காரணம் அல்ல!

வேலை பறிப்புக்கு ஆட்டோமேஷன் நேரடிக் காரணம் அல்ல; மாறாக, சர்வதேச அளவிலான அரசியல் அழுத்தங்கள்தான். மேற்கத்திய நாடுகள் தங்களின் அவுட்சோர்ஸிங் பாலிசிகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், டிரம்ப் போன்றோரின் நடவடிக்கைகள் குடியேற்றங்களுக்கும், பணியாற்ற இடம்பெயர்பவர்களுக்கும் மிகப்பெரிய தடையாக மாறியுள்ளன. இதனுடன் ஊழியர்களின் செயல்திறனிலும் தொய்வு இருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. 

ஊருக்கு ஊர் தேநீர் கடைகள்போல பொறியியல் கல்லூரிகளைத் திறந்துவிட்டு, அனுபவமிக்க, அர்ப்பணிப்புமிக்க ஆசியர்கள் இல்லாமல், தரமான கல்வி இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் பொறியியலாளர்களாகத்தான் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். இதற்கு யாரைக் குற்றம் சொல்ல முடியும்? 

`இன்ஜினீயரிங்கோடு சேர்த்து ஒரு கோர்ஸ் படிச்சு, முழிச்சிக்கோங்க மக்களே' என்கிறார்கள் பெரும்பாலான சீனியர் அதிகாரிகள். வெறும் பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு இனி காலத்தை ஓட்ட முடியாது. கூடுதல் அறிவும் திறமையும் நிச்சயம் அவசியம். எனவே, பட்டம் முடித்தவர்களானாலும் சரி, பட்டம் படிப்பவர்களானாலும் சரி, இதைக் கவனத்தில்கொள்ளுங்கள். நிச்சயம் ஜெயித்துவிடலாம். வேலை பறிபோகும் என்ற பயமே இருக்காது. 

எந்த நகரத்தில் என்னென்ன துறைகளுக்கு வாய்ப்பு!

திடீர் வேலைப் பறிப்புகளைத் தவிர்க்க டீம்லீஸ் நிறுவனம் ஒரு வழியைக் கொண்டு வந்துள்ளது. கன்சல்டன்சி நிறுவனமான டீம்லீஸ் பல்வேறு நகரங்களில் வேலைவாய்ப்புக்கு வாய்ப்புள்ள துறைகளை ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளது. அதன்படி மும்பை நகரில் நிதி சார்ந்த துறைகளில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகவும், அது போக டெலிகாம், ஹெல்த் மற்றும் பார்மா துறைகள் வேலைவாய்ப்பு தரும் துறைகளாக உள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூருவைப் பொறுத்தவரை நிதித்துறை, இ-காமர்ஸ், மற்றும் ஸ்டார்ட் அப் ஆகிய துறைகள் வேலைவாய்ப்பு தரும் துறைகளாக உள்ளன. கொல்கத்தாவில் நிதித்துறையோடு சேர்த்து, ஊடகத்துறை மற்றும் கல்வித்துறையில் வாய்ப்புகள் உள்ளன. புனேவில் டெலிகாம், இ-காமர்ஸ் மற்றும் ஸ்டார்ட் அப் போன்ற துறைகள் முன்னணி வேலைவாய்ப்பு தருகின்றன. ஹைதராபாத்தில் நிதித்துறை, ஊடகம் மற்றும் சினிமா துறை நன்றாக உள்ளன. சென்னையை எடுத்துக்கொண்டால் நிதித்துறை, டெலிகாம் மற்றும் ரீட்டெய்ல் துறைதான் அதிக வேலை வாய்ப்புகளைத் தரும் துறைகளாக உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்