வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (22/06/2017)

கடைசி தொடர்பு:16:34 (22/06/2017)

ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின வேட்பாளரா?! காங்கிரஸின் திட்டம் என்ன?

2017 ஜனாதிபதி தேர்தல்

2002-ல் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் பரிந்துரை செய்தன. ஆனால், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு மட்டும் அதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தது. காரணம், கே.ஆர்.நாராயணன் தலித் என்பதாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது மத்தியில் இருக்கும் அதே கட்சிதான் தலித்தான ராம்நாத் கோவிந்தைத் தனது ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. 

பாபாசாகிப் அம்பேத்கரின் பேரனும் பாரிபா பகுஜன் மகாசங் கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர், ''பி.ஜே.பி தனது வேட்பாளராக ஒரு தலித்தை முன்னிறுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் மீராகுமாரை வேட்பாளராக முன்னிறுத்துவது வலுவான எதிர்ப்பாக இருக்காது. ஒருவேளை, கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்தப்படுவதாக இருந்தாலும் அதனைக் காங்கிரஸ் முன்னரே அறிவித்திருக்கவேண்டும். தற்போது அவரை முன்னிறுத்துவதும் வலுவற்றதாகவே அமையும். ஆனால், ஒரு பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவரை வேட்பாளராகக் காங்கிரஸ் அறிவிக்கும் என்றால், அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்” என்று கூறியுள்ளார். பிரகாஷ் அம்பேத்கரே காங்கிரஸ் தரப்பு வேட்பாளராக இருக்கலாம் என்று சில ஊகங்கள் இருந்துவரும் நிலையில், அவரின் இந்தக் கருத்து கவனிக்கப்படவேண்டியதாக இருக்கிறது. 

''ராம்நாத் கோவிந்தின் பெயர் அறிவிக்கப்படும்வரை, பி.ஜே.பி தரப்பிலிருந்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்முதான் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., திரௌபதி முர்மு பழங்குடியினர் என்கிற காரணத்துக்காகவே அவரை முன்னிறுத்தவேண்டாம் என்று பி.ஜே.பி அறிவுறுத்தியது” என்கிறார் அவர்.

கோவிந்தை வேட்பாளராக முன்னிறுத்துவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய எதிர்காலத் திட்டத்தின் முதல்படி என்பது அவரது கருத்தாக இருக்கிறது. 2019-லும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலைபாட்டில் இருக்கும் மத்திய அரசு, அப்போது நாட்டின் தலைமைப் பீடத்தில் ஒரு தலித் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இருக்கும் நிலையில், இடஒதுக்கீடு மற்றும் உரிமைகளின் மீதான தடைகளைக் கொண்டுவருவது அவர்களுக்கு எளிதாக அமைந்துவிடும் என்பது அவரின் ஊகம். 

ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களில் பலர் ஆதிவாசிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில் அவரது அறிவுரையும் சரியென்பதாகவே இருக்கிறது. 

மத்திய அரசு பழங்குடியினர் பிரிவில் ’தங்கர்’ என்னும் மேய்ப்பர் சமூகத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதை எதிர்த்து அண்மையில், மகாராஷ்டிரா முழுவதும் பழங்குடியினர் சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில், வேட்பாளர் ஒரு பழங்குடியினராக இருந்தால் அது நாட்டுக்கே ஒரு திருப்புமுனையாக இருக்கும். ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக குரல்கொடுத்துள்ள சிவசேனா கட்சியில்கூட அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசி எம்எல்ஏ-க்களே இருக்கும் நிலையிலும், இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு கட்சியிலும் ஆதிவாசி எம்எல்ஏ-க்கள் இருக்கும் நிலையிலும் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தால், நிச்சயம் வெற்றிவாய்ப்பு கிடைக்கும். தோற்றாலும், அந்தச் சமூகத்திலிருந்து வேட்பாளரை முன்னிறுத்துவது நாட்டுக்கொரு வலுவான செய்தியாக அமையும்.

பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், ''பி.ஜே.பி., தனது மதச்சார்பு ஆதிக்கத்தைத் தலித் என்னும் முகமூடியுடன் முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமாகி வருகிறது. இந்த ராம்நாத் கோவிந்த், கே.ஆர்.நாராயணன்போல் இல்லை. அவர், அடல் பிகாரி வாஜ்பாய் சொன்னதற்கெல்லாம் அடிபணிந்து போகவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் வேரூன்றி வளர்ந்த ராம்நாத் கோவிந்தின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என எளிதில் அனுமானித்துவிடலாம். பி.ஜே.பி., பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவுகளை அதிவேகமாகத் திரட்டிவரும் நிலையில் காங்கிரஸ் தரப்பு விரைந்து தனது வேட்பாளரை அறிவிப்பதே சிறந்ததாக இருக்கும்” என்கிறார்.  

நன்றி: தி வயர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்