வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (23/06/2017)

கடைசி தொடர்பு:16:08 (23/06/2017)

ஒரு புக்கிங்கூட இல்லை! இந்தியாவின் சொகுசு ரயில் மகாராஜாவுக்கு வந்த சோதனை

மகாராஜா எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய யாரும் புக் செய்யாததால் அதன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


மொத்தம் 84 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ரயிலில் வைஃபை, சாட்டிலைட் சேனல் மற்றும் டிவிடியுடன் தொலைக்காட்சி, தொலைபேசி, ரெஸ்டாரன்ட், பார் என இதன் வசதிகள் ஏராளம். உணவு எல்லாம் தங்கத் தட்டில்தான் பரிமாறப்படும். இந்த ரயிலை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு புதிய வழித் தடங்களில் இயக்க ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, நாளை மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வரை சுற்றுலாத்தலங்களை இணைக்கும் விதமாக, இந்த ரயில் தொடங்கப்பட இருந்தது. தொடர்ந்து செட்டிநாடு, மகாபலிபுரம், மைசூர், ஹம்பி, கோவா சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வழித்தடத்தில் ஜூலை 1-ம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ரயில் நாளை மும்பையில் இருந்து புறப்பட வேண்டும். ஆனால், யாருமே புக் செய்யாததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஒரு டிக்கெட் புக் செய்தால் இன்னொரு டிக்கெட் இலவசம் என்ற சலுகையும் ரயில்வே அறிவித்திருந்தது. ஜூலை 1-ம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து தொடங்க இருந்த பயணத்துக்கு மட்டும் 15 பேர் புக் செய்துள்ளனர்.

கூடுதல் டைரக்டர் ஜெனரல் அனில்குமார் சக்சேனா கூறும்போது, "செப்டம்பரில் இதை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம். அதற்கு முன்னதாக, இந்த ரயில் பற்றி விளம்பரப்படுத்த உள்ளோம்" என்றார்.

8 நாள் சுற்றுலாவுக்கு 5 லட்சம் ரூபாய், ஜூனியர் சொகுசு சூட் 7 லட்சம் ரூபாய். தனி சூட் 10.09 லட்சம், பிரசிடென்சியல் சூட் 17.33 லட்சம் ரூபாய் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.