வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (24/06/2017)

கடைசி தொடர்பு:17:21 (24/06/2017)

பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் சிட்டியாகிறது புதுச்சேரி

புதுச்சேரி


த்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு வெளியிட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதுச்சேரி நகரமும் இடம்பெற்றுள்ளது. இதை, முதமைச்சர் நாராயணசாமி இனிப்பு வழங்கி கொண்டாடினார். 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, 

“இந்திய அளவில் 100 தரம்வாய்ந்த நகரங்களை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தில், புதுச்சேரியில் முதலில் முந்தைய என்.ஆர்.காங்கிரஸ் அரசு, சேதராப்பட்டில் அமைக்க முடிவுசெய்தது. அதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. இரண்டாவது முறையாக வரைபடத்தைத் திருத்தி அனுப்பியும் அது நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. சேதராப்பட்டில் ஸ்மார்ட்சிட்டியை அமைத்தால் அது புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்காது என்பதால், புதுச்சேரி நகரையே மாற்றியமைக்க முடிவெடுத்தோம்" என்றார். 

மேலும், “இத்திட்டத்தில் முத்தியால்பேட்டை, உப்பளம், ராஜ்பவன், நெல்லித்தோப்பு உருளையன்பேட்டை ஆகிய தொகுதிகளின் சில பகுதிகளையும் இணைத்து, சுமார் 5.5 கி.மீ. சுற்றளவுக்குள் ஸ்மார்ட் சிட்டி இருக்குமாறு, மத்திய அரசுக்குக் கருத்து அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் எட்டாவது இடத்தில் புதுச்சேரி இடம்பெற்றுள்ளது. இத்திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கவேண்டும். ஆனால், முன்கூட்டியே முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்.

இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.500 கோடி, மாநில அரசு ரூ.500 கோடி, பிரெஞ்சு அரசு ரூ.500 கோடி, வெளிக்கடன் ரூ.350 கோடி என 1,850 கோடி ரூபாய் செலவழிக்கப்படும். பிரெஞ்ச் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் இத்திட்டப்பகுதியில் 24 மணிநேர குடிநீர், மின்சாரம் கிடைக்கும். ரயில், பேருந்து நிலையங்களின் தரம் உயர்த்தப்படும். வாகன நிறுத்த வசதி செய்துதரப்படும். குப்பைகள் முறையாக அகற்றப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படும். மார்க்கெட் நவீனமயமாக்கப்படும். மருத்துவ வசதி மேம்படுத்தப்படும். பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்” என்றும் கூறினார்.

உடனிருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் ஓடும் பெரிய வாய்க்காலில் படகுகள் விடும் திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் விதமாக ஸ்கை பஸ், மோனோ ரயில், மின்சார ரயில் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒட்டுமொத்த புதுச்சேரி நகரமும் பொலிவுபெறும்” என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்