வெளியிடப்பட்ட நேரம்: 04:29 (25/06/2017)

கடைசி தொடர்பு:04:29 (25/06/2017)

ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கு இன்ஃபோசிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்காவின் ஆலோசனை என்ன தெரியுமா?

'ஐ.டி துறையில் இருப்பவர்கள் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கவனம் செலுத்துவது அவசியம்' என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ விஷால் சிக்கா. பெங்களூரூவில் நடைபெற்ற இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 36-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கி இருக்கிறார். 

விஷால் சிக்கா


'ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கவனம் செலுத்த விரும்புகிறவர்கள் எப்படி, என்ன, ஏன் என்று கேட்க பழகிக்கொள்ள வேண்டும். மக்கள் தங்களுடைய பணிகளைத் திறமையுடன் மேற்கொள்வதற்கு ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவு பெரிய அளவில் உதவ தயாராக இருக்கிறது. இவை இனிவரும் காலங்களில் மனிதர்களின் வேலையையும், பணிச்சுமையையும் வெகுவாக குறைத்து விடும். இதன்விளைவாக தகவல் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்பில் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்தாலும், ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் திறனை வளர்த்துக்கொண்டால் வேலை வாய்ப்புகள் நிறையவே காத்திருக்கின்றன', என்கிறார். 

'தற்போது ஓட்டுநர்கள் இல்லாமலேயே வாகனங்கள் இயக்குவதற்குப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, மைசூர் வளாகத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் உருவாக்கி  இயக்கி வரும் தனியங்கி கோஃல்ப் வண்டியைச் சொல்லாம். தற்போது, டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆளில்லா வாகனங்கள் இயக்கத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அடுத்து, ஆளில்லா விமானம், ரோபோ, மற்றும் க்ளவுட் கம்ப்யூட்டிங் பிரிவுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம்', என்று  ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவுகளின் வளர்ச்சிக்கான ஆரம்பத்தைக் கோடிட்டு காண்பிக்கிறார் விஷால் சிக்கா. 

'இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்திய தபால் துறை, வணிகத்துறை நிறுவனங்களின் திட்டப்பணிகளை எதிர்நோக்கி இருக்கிறது. மத்திய அரசு ஜூலை மாதம் முதல் தேதியில் அமுல்படுத்த இருக்கிற ஜிஎஸ்டி வரி அமைப்பில் இருந்தும் ஏராளமான திட்டப்பணிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார் விஷால் சிக்கா.

இவரது ஆலோசனைகள் ஐடி துறையில் சாதிக்க காத்திருப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்தான்!