வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (25/06/2017)

கடைசி தொடர்பு:08:48 (26/06/2017)

மக்களவையில் மீரா குமார் செய்தது இதுதான்... வீடியோ மூலம் சாடிய சுஷ்மா!

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ம் தேதி முதல் தாக்கல்செய்யப்பட்டுவருகின்றன. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீரா குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ராம்நாத் கோவிந்த்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், தற்போது இரு தரப்புக்குமிடையே பனிப்போர் தொடங்கியுள்ளது. 

Sushma Swaraj

மீரா குமார், முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள். மக்களவையில் முதல் பெண் சபாநாயகர் (2009 - 2014). ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் கேபினட் அமைச்சராக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் நீர்வளத்துறையிலும் பொறுப்பு வகித்தவர். மக்களவை சபாநாயகராக அவர் இருந்தபோது, "தயவுசெய்து தங்களது இருக்கையில் அமருங்கள்" என்று அவர் அடிக்கடி சொல்வதை யாராலும் மறக்க முடியாது.


இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தன் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். "எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரை மக்களவை சபாநாயகராக இருந்த மீரா குமார் நடத்தும் விதத்தைப் பாருங்கள்" என்று அந்த வீடியோவின் யூ-டியூப் லிங்கைப் போட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு மக்களவையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், காங்கிரஸ் அரசின் ஊழல்களைக் குற்றச்சாட்டுகளாக சுஷ்மா அடுக்குகிறார். மீரா குமார் அதற்கு, "ஆல் ரைட்... ஆல் ரைட்... நன்றி. உங்களது இருக்கையில் அமருங்கள்" என்று கூறுகிறார். 

 


அதாவது, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பேசவிடாமல் மீரா குமார் இடையூறுசெய்தார் என்று சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.