வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (26/06/2017)

கடைசி தொடர்பு:13:39 (26/06/2017)

'மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்' -எம்பி., எம்எல்ஏ-க்களுக்கு மீரா குமார் கடிதம்..!

'மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்' என்று எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் எம்பி., எம்எல்ஏ-க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 


பா.ஜ.க குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல்செய்தார். எதிர்க் கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீரா குமார், எம்எல்ஏ. மற்றும் எம்பி-க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'ஜனநாயகத்தைக் காப்பேன் என்று குடியரசுத் தலைவர் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார். ஒரு சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு, நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்குத்தான் இறுதி அதிகாரம் அளித்துள்ளது.

எனவே, குறுகிய அரசியல் சிந்தனை உள்ளவர்கள், அந்தப் பதவியில் செயல்பட முடியாது. என்னுடைய சக உறுப்பினர்கள், வரலாற்றை உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள், எங்களுடன் இணைந்து நில்லுங்கள்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு 60 சதவிகித ஆதரவு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்துக் கட்சி எம்பி., எம்எல்ஏ-க்களுக்கு மீரா குமார் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.