வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (26/06/2017)

கடைசி தொடர்பு:08:32 (27/06/2017)

பெங்களூரு பெண்களுக்கு அதிகபட்ச அநீதி எங்கு நடக்கிறது தெரியுமா? #ShockingFact

பெங்களூரு

ருபுறம் ஐ.டி துறையின் பிரமாண்டம்... மறுபுறம் பூங்காக்களின் அழகு என நவீனமும் இயற்கையும் கலந்த நகரம் பெங்களூரூ. ஆனால், பெண்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் நடக்கும் நகரமாக மோசமான பெயரையும் பெற்றுள்ளது. 
சமீபத்தில், பெங்களூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து ஓர் ஆய்வு நடந்தது. அதில், கணவன் வீட்டாராலும் பொது இடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களாலுமே 70% பெண்கள் பாதிக்கப்படுகின்றனராம். பெங்களூரு நகரம், நவநாகரிக பெண்கள் வசிக்கும் இடமாகக் கருதப்படுகிறது. அதே சமயம், அங்கே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதனை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது இந்த ஆய்வு. 

2015-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களாக 3,157 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில், கணவன் வீட்டாரால் ஏற்படும் கொடுமைகளாக 42 சதவீத வழக்குகளும், பொது இடங்களில் நடக்கும் பாலியல் துன்புறத்தலாக 30.9 சதவீத வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான குற்றங்கள் இரவில் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 வரை 100 குற்றங்கள் நடந்துள்ளது எனில், மாலை 6 முதல் காலை 6 வரை 127 குற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், பாலியல் வன்முறைக் குற்றங்கள் பெரும்பாலும் பகலிலேயே நடந்திருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. 270 பாலியல் வன்முறை வழக்குகளில், 144 வழக்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 வரை நடந்தவையாம். பெங்களூரின் பிரபலமான பெங்களூருஜெய நகர் பகுதியில்தான், பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்துள்ளன. 2015-ம் ஆண்டு மட்டும் 120 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, அந்த நகரத்தின் மையப் பகுதியில் உள்ள அல்சூரில் 180 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேநேரம், கே.ஆர்.மார்கெட், யெஷ்வந்த்புரா போன்ற பரபரப்பான பகுதிகளில் எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக, கர்நாடக மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 24 சதவீதம் பெங்களூரில் நடக்கிறது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில், தண்டனை வழங்கும் வீதமும் குறைவாகவே உள்ளது. இது குறித்து கர்நாடக காவல் துறை தலைமை இயக்குநர் ரூபக் குமார் தத்தா கூறுகையில், “நீதிமன்ற விசாரணையில் நடக்கும் தாமதமே, பெரும்பாலான வழக்குகளில் தண்டனை வழங்கப்படாமல் இருக்கக் காரணம்” என்கிறார். 

2012-ம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் கிட்டதட்ட 709 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில், 46 வழக்குகளுக்கே தீர்ப்பு வழங்கப்பட்டன என்றும் ரூபக் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை தடுப்பு குழுவின் தலைவருமான வி.எஸ்.உக்ரப்பா (V.S.Ugrappa) கூறுகையில், “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் தண்டனை பெறுபவர்கள் வெறும் மூன்று சதவீதமே. மற்ற அனைத்து மாவட்டங்களைக் காட்டிலும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற இடமாக பெங்களூரு உள்ளது. நம் சட்டத்தின் மீது எந்தப் பயமும் இல்லாததே இதுபோன்ற குற்றங்கள் நடக்க முக்கியக் காரணம்” என்கிறார். 

பெண்களுக்கு நவீனமும் சுதந்திரம் தரவில்லை; சட்டமும் பாதுகாப்பு தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை மாற உரிய நடவடிக்கை எடுக்குமா கர்நாடகா அரசு?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்