வெளியிடப்பட்ட நேரம்: 05:24 (27/06/2017)

கடைசி தொடர்பு:07:34 (27/06/2017)

மும்பை சிறையில் கலவரம்... இந்திராணி முகர்ஜிக்கு முக்கிய பங்கு!

பைகுல்லா சிறைச்சாலையில் பெண் கைதிகள் போராட்டத்தைத் தூண்டியதாக, ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திராணி முகர்ஜி

மும்பையில் உள்ள பைகுல்லா சிறைச்சாலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெண் கைதி ஒருவர் உயிரிழந்தார். சிறையில் உள்ள காவலர்கள் தாக்கியதால் அவர் இறந்ததக் கூறப்பட்டது. இதையடுத்து, ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் பணியிலிருந்து இடைநீக்கம்செய்யப்பட்டனர். இதனிடையே, பெண் கைதி கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து மற்ற கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறையில் கலவரம் உருவானது.

இந்த நிலையில், பைகுல்லா சிறைச்சாலையில் பெண் கைதிகளைப் போராடத் தூண்டியதாக, இந்திராணி முகர்ஜி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், சிறைச்சாலையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில், அவருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திராணி முகர்ஜி உள்பட அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பெண் கைதிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இவர், கடந்த 2012-ம் ஆண்டு தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்.