“பீட்சாவுக்கு 5 சதவிகிதம்; கடலைமிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரியா?” - ஜி.எஸ்.டி-க்கு எதிராகக் குமுறும் வணிகர்கள்! | Merchants against GST

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (27/06/2017)

கடைசி தொடர்பு:12:21 (27/06/2017)

“பீட்சாவுக்கு 5 சதவிகிதம்; கடலைமிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரியா?” - ஜி.எஸ்.டி-க்கு எதிராகக் குமுறும் வணிகர்கள்!

ஜி.எஸ்.டி

''ஒரே நாடு, ஒரே வரி பாரத் மாதாக்கி ஜே!''

- ஜூன் 25-ம் தேதி, ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் தொடங்கிய சென்னை கலைவாணர் அரங்கில் இப்படித்தான் முழங்கியபடியே நுழைந்தனர் பி.ஜே.பி-யினர். 

ஜி.எஸ்.டி குறித்து பல்வேறு தொழிற்பிரிவினருக்கும் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு 'வர்த்தகம் மற்றும் தொழிற்துறையின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்' விளக்கமளித்த இக்கருத்தரங்கத்தில் காரசாரத்துக்குப் பஞ்சமில்லை. "இதுவரை நாம வாங்குற பொருளுக்கு பல்வேறுவிதமான வரிகளைச் செலுத்தியிருப்போம். இனி நாடு முழுக்க ஒரே ஒரு வரியை மட்டும் செலுத்துவதே 'ஜி.எஸ்.டி'. இது மோடி அமல்படுத்தும் பொருளாதாரப் புரட்சி" எனக்கூறி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

அடுத்துப் பேச வந்த நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் டாக்டர் மோகன், "அரிசி, கோதுமைக்கு 0 சதவிகித வரியை வரவேற்கிறோம். அதேநேரம் பாக்கெட் செய்து விற்கும் அரிசிக்கு 5 சதவிகிதம் வரி போடப்பட்டிருக்கிறது. பாசுமதி அரிசி விற்கும் ஐ.டி.சி, பதஞ்சலி போன்ற பெரிய நிறுவனங்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால், நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக பாசுமதி அல்லாத நம்முடைய அரிசியையே 32-50 ரூபாய்க்குள் தரத்துடன் பாக்கெட் செய்து விற்கிறோம். இதற்கும் 5 சதவிகித வரி என்பது அரிசியை பெருமளவு நுகரும் தென்னிந்திய மக்கள் மீது சுமத்தப்படும் சுமையே. ஆடம்பரப் பொருளான தங்கத்துக்கு 3 சதவிகித வரி. அத்தியாவசிய அரிசிக்கு 5 சதவிகித வரி என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார். 

ஜி.எஸ்.டி கருத்தரங்கம்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ் தமது உரையில்,

“இந்தியாவில் 90 சதவிகிதப் படங்கள் தோல்விப்படங்களாக இருக்கின்றன. ஜி.எஸ்.டி ஒரு மாபெரும் முன்னெடுப்பு. நாங்கள் வரிகொடுக்கத் தயாராக இருக்கிறோம். திரைத்துறை மிகவும் தனித்துவமானது. ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தர் திருப்பித்தரும் உத்திரவாதத்துடன் (Refundable deposit) பணம் கொடுக்கிறார். இதேபோல், திரையரங்க உரிமையாளர் விநியோகஸ்தருக்கு கொடுக்கிறார். இந்தப் பணத்துக்கு எப்படி ஜி.எஸ்.டி? இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறபோது எப்படி ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என்று விளக்கம் வேண்டும்" என்றார். "வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து திரைப்படத்துக்காகக் கலைஞர்கள், பணியாளர்களை அழைத்து வருகிறோம். அவர்களுக்கு எப்படி ஜி.எஸ்.டி வரி விதிப்பது? அவர்களைப் பாதியில் திருப்பி அனுப்பிவிட்டால், ஜி.எஸ்.டி திருப்பி அளிக்கப்படுமா?" என்றார் சின்னத்திரை மற்றும் திரைப்படக் கலைஞர்கள் சங்க குட்டி பத்மினி.

“வெள்ளிக்கிழமை மதியம் வரை கோடீஸ்வரராக இருப்பவர், படம் தோற்றுவிட்டால் சனிக்கிழமையே தெருக்கோடிக்கு வந்துவிடுகிறார். இந்த நிலையில், 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி எங்க சினிமாத்துறையைப் பாதிக்கும்" என்றார் ஸ்டண்ட் நடிகர் ஜாக்குவார் தங்கம். ''கோரை பாய்க்கு தமிழக அரசு வரிவிலக்கு கொடுத்திருந்தது. ஆனால் ஜி.எஸ்.டியோ 12 சதவிகிதம் வரி போட்டிருக்கிறது" வேதனையோடு பகிர்ந்தார் கோரை பாய் சங்க ராஜேந்திரன். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க சங்கர், "தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கும் 18 சதவிகிதம் வரி நியமித்துள்ளீர்கள். உதாரணமாக, 15 ரூபாய்க்கு கழிவு வாங்குகிறோம் என்றால் அதில் 3 ரூபாய் வரி போய்விடும். ஒருநாளைக்கு 300 ரூபாய் கழிவுகள் வாங்கினால், வரிக்கு 60 ரூபாய் போக, கழிவுகளைப் பொறுக்குபவருக்கு கிடைக்கப் போவது 240 ரூபாய் மட்டுமே. எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் தொழிலை விட்டு விலகுவர். இதனால் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் முடங்கும். அப்புறம் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் எப்படி வெல்லும்?" என்றார் கேள்வியோடு. "சிறிய அளவில் நெசவு தொழில் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி சுமையாக இருக்கிறது" என்று ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் பேசியபோது, "பொத்தாம் பொதுவாக பேசவேண்டாம். ஆடை அலங்கார வேலை செய்யும் கூலி நெசவாளர்களுக்கு வரி இல்லை. ஆனால், அந்த அலங்காரத்தின் மூலம் ஜவுளியின் மதிப்பு கூடுவதால், அதற்கு ஜி.எஸ்.டி வரி உண்டு" என்று எழுந்து காட்டமாகவேப் பதிலளித்தார் நிர்மலா சீதாராமன். இதன்பிறகு பேசத்தொடங்கிய வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா,

ஜி.எஸ்.டி கருத்தரங்கத்தில் உரையாற்றும் நிர்மலா சீதாராமன்

“பேக்கரியில் சாதாரண ஜனங்க வாங்கிச் சாப்பிடும் பொருட்களுக்கு 18 சதவிகிதம் வரி. பத்துக்குப் பத்து சின்னப் பெட்டிக் கடையில் கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டாலும் 18 சதவிகிதம் வரி கட்டணும். ஆனால் பீட்சா, பர்கருக்கு அதே 5 சதவிகித வரி மட்டுமே என்றால், இந்த ஜி.எஸ்.டி- யால் பலன் பெருகிறவர்கள் யார்? என்று நாமே புரிந்துகொள்ளலாம். ஜி.எஸ்.டி-யின் மூலம் அரசுக்கு  எப்படியும் பணம் கொட்டப்போகிறது. அந்தத் தொகையில், 2 சதவிகிதத்தை மட்டும் தனியாக ஒதுக்கி, அதில் ஒரு சதவிகிதத் தொகையை, 60 வயதுக்கு மேல் உள்ள நலிந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியமாக வழங்கவேண்டும். மற்றொரு சதவிகிதத்தைக் கலவரம், போர் மற்றும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவேண்டும்." என்றார் கோரிக்கையாக. தொடர்ந்து பேசிய அவர்,  "இங்கு நாம் பேசியபோது, இடையிடையே விளக்கம் கொடுத்த மத்திய அமைச்சர் குரல் உயர்த்திப் பேசினார். அவர் கோபப்பட்டதாக எண்ண வேண்டாம். அது அவரின் இயல்பு. அந்தளவுக்கு அவர் ஜி.எஸ்.டி-யில் ஷார்ப்பாக உள்ளார் என்று இது காட்டுகிறது. வணிகர்களாகிய நாமும், நமக்கான விஷயங்களில் ஷார்ப்பாக இருக்க வேண்டும்" என்றார் வேடிக்கையாக. பல்வேறு தொழில் வணிகர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு ஜி.எஸ்.டி தலைமைக் கமிஷனர் (சென்னை) சி.பி.ராவ், ஜி.எஸ்.டி கமிஷனர் (திருச்சி) ஜே.எம் கென்னடி, ஆடிட்டர் சேகர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். 

இறுதியாகப் பேசவந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிராண்ட் அரிசி' என்று விற்பதன் மூலம் அதன் மதிப்பு கூடுகிறது. எனவே அந்த அடிப்படையிலேயே 5 சதவிகிதம்  வரி விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குறித்து கேட்கப்பட்ட சந்தேகங்களை ஜி.எஸ்.டி கவுன்சில் முன் கொண்டு செல்கிறேன். இந்தக் கருத்தரங்கை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தவேண்டும் என்பதே அரசின் விருப்பம். அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். மேலும், விளக்கங்கள் தேவைப்படுபவர்கள் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு மனு கொடுக்கலாம். தமிழ்நாடு சட்டசபையில் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு, ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதற்கு தமிழக  அரசுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடி திட்டமிட்டு எதையும் திணிக்கவில்லை. ஏனெனில், தமிழ்நாட்டில் மோடி அனைத்தையும் திணிக்கிறார்  என்றக் கருத்தை சிலர் பரப்புகிறார்கள். ஆண்டுக்கு 20 லட்சம் வரை வியாபாரம் செய்பவருக்கு வரி இல்லை. சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி இருக்கிறது. நாங்கள்  இல்லாத வரியைக் கொண்டுவரவில்லை. இருக்கிற வரியை ஜி.எஸ்.டி-யின் உள்ளே கொண்டுவந்து உள்ளோம். ஒருவேளை குறைந்திருக்கலாமே தவிர, கூடுதலாக வரி விதிக்கப்படவில்லை. அதிகாரிகள் வந்து விசாரித்த நிலை மாறி, கம்ப்யூட்டர் மூலமாக வியாபாரக் கணக்குகளை வியாபாரிகளே மேற்கொள்ளலாம். வெளிப்படையான வரி விதிப்பு என்பதால், அதிகாரிகள் வந்து லஞ்சம் பெறமுடியாது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், எப்போதும்  வரியை வணிகர்கள் கட்டப்போவதில்லை.

காட்டமாக பதிலளிக்கும்  நிர்மலா சீதாராமன்

பொருள் வாங்கும் மக்கள்தான் வரியைக் கட்டுகிறார்கள். இதனால் வணிகர்களுக்குப் பாதிப்பில்லை. அதேபோல  ஜி.எஸ்.டி வரியினால் விலைவாசி ஏறும் என்றும் பரப்புகிறார்கள். அப்படியெல்லாம் விலைவாசி ஏறாது. அதேநேரம் இந்தியா ராக்கெட் விடவேண்டும், வல்லரசாக வேண்டும் என்று மக்களான நீங்கள் நினைக்கிறீர்கள். இதையெல்லாம் எப்படி நிறைவேற்ற முடியும்? வரி வாங்கினால்தானே அனைத்தையும் செயல்படுத்த முடியும். ஆக, மக்கள் அளிக்கும் வரி அரசாங்கத்துக்குத்தான் செல்கிறது. அதைக் கொண்டே மேற்கண்ட மக்கள் நலத்திட்டங்களை அரசு செய்யும். நாங்கள் வரி கேட்பது எங்களுக்காக இல்லை. உங்களுக்காகத்தான். நாடு நல்லாருக்கத்தானே வரி கட்டச் சொல்கிறோம். அதில் தவறொன்றுமில்லையே?" என்றார் விரிவாக. 

அதேநேரம், ''இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வான வளர்ச்சியுள்ள பல்வேறு பிரிவு, பண்பாட்டு பழக்கவழக்கம் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில், நாடு முழுக்க ஒரே அளவிலான வரியினை விதிப்பதும், மாநில அரசுகள் வரி அளவினை முடிவு செய்ய அனுமதிக்காமல் தடுப்பதும் மாநில தன்னாட்சி பறிப்பே. இந்த வரியை, மாநிலங்கள் ஒப்புக்கொள்ளச் செய்வதன் பின்னணியில், மத்திய எதேச்சதிகாரமும் உள்ளது. வரி விகிதம் குறைவாக இருந்தால், அது மாநில அரசுகளின் பொருளாதாரத் தன்னாட்சியைக் கேள்விக் குறியாக்கும். வரி அதிகமாக வசூலித்தால், வரி செலுத்துபவர்களின் தளம் விரிவடையாமல் நின்றுவிடும். அதிகாரம் என்பது பொருளாதாரம் எங்கு குவிந்து கிடக்கிறதோ அங்குதான் நிலைபெற்று நிற்கும். இது மீண்டும் மத்திய எதேச்சதிகாரத்தைக் கூர்மைப்படுத்தும்.  ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை ஒருமுகப்படுத்தி, இந்தியச் சந்தையை ஒரே சந்தையாக முதலாளிகளுக்கு விற்பதும், வரி வருவாயை மத்திய அரசிடம் குவித்து மாநிலங்களின் பொருளியல் அடித்தளத்தை பலியிடுவதுமே ஜி.எஸ்.டி சட்டத்திருத்தத்தின் நோக்கம்.'' என இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக சிந்தனையாளர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். 

ஜுலை 1 - ம் தேதி முதல் நாடு முழுக்க ஒரே வரியான ஜி.எஸ்.டி அமலாகும் நிலையில், அதுகுறித்த சந்தேகங்களும், பீதியும் தொடர்ந்தபடியே உள்ளன.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close