வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (28/06/2017)

கடைசி தொடர்பு:11:45 (28/06/2017)

ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன?

மோடி

உலக அரசியல் வரலாற்றில் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதாகத்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ட்ரம்ப் புகழ்ந்ததும், அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே.

அமெரிக்காவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்றனர். பின்பு பேசிய ட்ரம்ப் 'மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். இந்தியாவை அவர் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்' என்று மோடிக்குப் புகழாரம் சூட்டினார்.

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியைச் சந்தித்த மோடி, அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பிரத்யேகமாகக் கொண்டுசென்ற பரிசுகளை வழங்கினார். ஹிமாச்சல் சில்வர் பிரேஸ்லெட், காங்க்ரா வாலி தேயிலை, தேன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி சால்வைகள் ஆகியவை மோடி வழங்கிய பரிசுப்பொருள்களில் அடங்கும்.

"உலகளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும். பயங்கரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் முழுமூச்சுடன் இணைந்து பணியாற்றும். ராணுவரீதியாகவும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என்று மோடியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் ட்ரம்ப் தெரிவித்தார்.

மோடி - ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றுள்ளது. இதில் 20 நிமிடம் இருவரும் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். சந்திப்பின்போது, இருவரும் பல்வேறு முக்கியமான பிரச்னைகள் குறித்து பேச்சுகள் நடத்தியதாகத் தெரிகிறது.

மோடி

ட்ரம்ப் - மோடி சந்திப்பு ட்விட்டர் டைம் லைன்:

ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப், ''பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறோம்" என்று ட்விட்டரில் பதிவிட்டார். அதை மோடி ரீ-ட்வீட் செய்தார்.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களான @FLOTUS மற்றும் @POTUS-ஐ குறிப்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். 

'இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது' என மோடி தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

ட்ரம்ப் உடன் தனியான சந்திப்பில் இருதரப்பு வர்த்தகம், தீவிரவாதம் குறித்து பேசப்பட்டது. 'இது, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகள் தொடர்பான படத்தை மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பின்பு மோடி, ட்ரம்ப், மெலனியா ஆகியோர் சந்தித்தது குறித்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

இந்தியா - அமெரிக்கா இடையேயான உத்திகள் தொடர்பான சிறந்த பேச்சுவார்த்தையாக இது அமைந்தது என்று பதிவிட்டு சந்திப்பு தொடர்பான ட்வீட்களை நிறைவு செய்தார் மோடி.

கைகுலுக்கத் தெரியாத மோடி, ட்ரம்ப்:

மோடி, ட்ரம்ப் இருவருமே விஐபி-களுடன் கைகுலுக்குவதில் சொதப்புவார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியபின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் கைகுலுக்கும் நேரத்தில் சிறு தடங்கல் ஏற்பட, பின்பு இருவரும் சுதாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கைகொடுத்தனர். 

சமூக வலைதளங்களில் Modi-Trump என்ற வார்த்தை ட்ரெண்டானது. இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அமைந்தது. ட்ரம்ப்பை இந்தியா வருமாறு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 

ட்ரம்ப் - மோடி சந்திப்பின் முக்கிய நோக்கமே, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்புடன் தொடர்புடையதாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருவருமே தங்களின் அதிரடித் திட்டங்கள் மூலம் அவரவர் நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்குவது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகப் பரவின. இந்தப் பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்