வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (28/06/2017)

கடைசி தொடர்பு:13:06 (28/06/2017)

பாபுஜியின் மகள் Vs ஆர்.எஸ்.எஸ்-ன் அன்பர்! இந்தியாவின் ரியல் பிக்பாஸ் யார்?

குடியரசு தலைவர் தேர்தல்

ளம் தெளிவாகிவிட்டது; யார், யாருடன் மோதப் போகிறார்கள் என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டது. கட்சிகளும் அணி பிரிந்துகொண்டு இருக்கின்றன. ராம்நாத் கோவிந்த் மற்றும் மீரா குமாரை முன்னிறுத்தியதன் மூலம், இந்த முறை குடியரசுத் தலைவருக்கான போட்டியைத் தலித் Vs தலித் என்பதாகப் பி.ஜே.பி-யும், காங்கிரஸும் மிக நுட்பமாக வடிவமைத்துவிட்டார்கள். ஒருவர், காங்கிரஸின் அதிதீவிர விசுவாசி... மற்றொருவர், ஆர்.எஸ்.எஸ்ஸின் களச் செயற்பாட்டாளர். முன்னவர் காந்தி, நேரு வழிவந்தவர்; பின்னவர் ஹெட்கேவர், கோல்வால்கரை ஏற்றுக்கொண்டவர். எந்தச் சித்தாந்தத்தை முன்னிறுத்திவிட்டதாக இரண்டு கட்சிகளும் நீண்ட கதாவிலாசம் தருகிறதோ, அந்த அம்பேத்கரிய - சாவித்ரிபாய் பூலேவுக்கும் இந்த இரண்டு பிரதிநிதிகளுக்கும் எந்தச் சித்தாந்த தொடர்பும் இல்லை.

சரி... சித்தாந்தங்கள் கடந்து குடியரசுத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது... இருவரின் முழுமையான பின்னணி, அரசியல் பின்புலம் என்ன?

பாபுஜியின் மகள்:

ஜெகஜீவன் ராம்நமக்கெல்லாம் ‘பாபுஜி’ என்ற வார்த்தையை கேட்டவுடன் யார் நினைவுக்கு வருவார்? காந்திதானே..! ஆனால், இந்தத் தேசத்துக்கு இன்னொரு பாபுஜி இருக்கிறார். துணைப் பிரதமராக இருந்த பாபுஜி அவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் களம் பல கண்டவர் ‘பாபுஜி’. அந்த பாபுஜி வேறு யாருமல்ல, நம் ‘ஜெகஜீவன் ராம்’தான். அவரின் செல்ல மகள்தான் காங்கிரஸின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார். இந்த ஆண்டு ஜெகஜீவன் ராம் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாபுஜியின் போராட்டம் அனைத்தும் நமக்கு ஊக்கம் தருவன” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அன்று நிச்சயம் அவர் யோசித்து இருக்கமாட்டார், தன்னுடைய வேட்பாளரை எதிர்த்துக் களம் காணப்போவது, அதே பாபுஜியின் மகள்தான் என்று!

மீரா குமார் என்று அறிவிக்கப்பட்டவுடன், முதல் நபராக தன் ஆதரவைத் தெரிவித்தவர் மாயாவதி. இதில் நகை முரண் என்னவென்றால், மீரா குமாரின் அரசியல் பயணமே மாயாவதியை வீழ்த்தித் தொடங்கிய ஒன்று. 1985-ம், ஆண்டு தேர்தல் அரசியல் களத்துக்கு வந்த மீரா குமார், உத்தரப்பிரதேச மாநில பீஜனூர் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று, அவர் அந்தத் தொகுதியில் வீழ்த்தியது இதே மாயாவதியையும், ராம் விலாஸ் பாஸ்வானையும். ராம் விலாஸ் பாஸ்வான் இன்று எதிரணியில் நிற்க, மாயாவதி மீரா குமாருடன் நின்றுகொண்டிருக்கிறார். 

ஆர்.எஸ்.எஸ்ஸின் அன்பர்:

பீகார் கவர்னராகப் பொறுப்பேற்றபின் ராம்நாத் கோவிந்த் பல்வேறு இடங்களில் பேசிய அவரது உரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவை அனைத்தும் அவரது மொழி ஆளுமைக்கும், அவரது பார்வைக்கும் சாட்சி பகர்கின்றன. ராம்நாத்தின் பார்வை ஆர்.எஸ்.எஸ் உடையது. ராம்நாத் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓடி உழைத்தவர்தான்... வழக்காடியவர்தான். ஆனால், சாதி, மதம் எனச் சித்தாந்தரீதியாக என்றும் அவர் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் முரண்பட்டவர் இல்லை. சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டை ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்தபோது அதைத் தீவிரமாக எதிர்த்தவர். அந்தக் கமிஷனின் அறிக்கையைக் கிழித்து வீசப்பட வேண்டும் என்றவர். ஏன், சீக்கிய தலித்களுக்கு இடஒதுக்கீடு இருக்கும்போது, கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்களுக்கு இருக்கக்கூடாதா...? என்றபோது... அவர், “அவை அந்நிய மதங்கள்” என்று சொல்லி, ஆர்.எஸ்.எஸ் பார்வையும், தமது பார்வையும் வெவ்வேறானது இல்லை என்று நிறுவியவர்.

நரேந்திர மோடி

ராம்நாத் கோவிந்த் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் கூறிவிட முடியாது. வக்கீல் வாழ்க்கை மட்டுமல்லாது அரசியல் வாழ்க்கையைச் சுவீகரித்துக்கொண்டதுமுதல் என்றும் எப்போதும் களங்கமற்றவராகத்தான் இருந்தார்; இருக்கிறார். ஆனால், அவரது பொது வாழ்க்கையில் ஒரு கறை. லஞ்ச குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்தபோது பங்காரு லட்சுமணனை ராம்நாத் ஆதரித்தார். பங்காருக்காகச் சாட்சியம் அளித்த ராம்நாத், ''எனக்கு பங்காரு லட்சுமணனை கடந்த இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவர், நேர்மையான எளிய மனிதர்” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார். ஆனால், பாராட்டுகள் எதுவும் பயனளிக்கவில்லை. பங்காருவைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இன்று, எதிர்க்கட்சிகள் ராம்நாத்துக்கு எதிராக இந்தச் சம்பவத்தை முன்வைக்கின்றன. 

சில ஒற்றுமைகள்:

ஒருவர், ஆர்.எஸ்.எஸ்ஸின் அன்பர்; இன்னொருவர், ‘பாபுஜி’யின் மகள் என்று இருவேறு துருவங்களாகத் தெரிந்தாலும், இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருவரும் ஒரே ஆண்டு, 1945-ல் பிறந்தவர்கள்; இருவரும் சட்டம் பயின்றவர்கள்; இருவரும் இந்தியாவின் பிரதிநிதிகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து உரையாற்றி இருக்கிறார்கள். 

எப்படிக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

1971-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி எம்பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓர் எம்பி-யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு, அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும். இந்தியா முழுவதும் 4,114 எம்எல்ஏ-க்கள் மற்றும் 776 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேச எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பே மிக அதிகம். அது, 208 ஆக உள்ளது. சிக்கிம் மாநில எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு மிகக்குறைவு. அதன் மதிப்பு, 7. தமிழக எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு, 176.  இதன்படி 776 எம்.பி-க்களின் வாக்கு மதிப்பு 5,49,408. 4,114 எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5,49,474. 50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார். அதன்படி 10,98,882 வாக்கு மதிப்பில் 5,49,442 மதிப்பு வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதி ஆகலாம். 

யாருக்கு வெற்றி வாய்ப்பு...?

தேசிய ஜனநாயகக் கூட்டணி, நிதிஷ்குமார், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள் ஆதரவு என இப்போது இருக்கும் நிலையில் ராம்நாத் கோவிந்துக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இவர்களின் வாக்கு விகிதாசாரம் தோராயமாக 60 சதவிகிதத்துக்கும் மேல். இப்போதைய நிலையில் எதிர்ப்பக்கம் நிற்கும் மீரா குமாருக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தி.மு.க என 17 கட்சிகளின் ஆதரவு இருக்கிறது. இதன் வாக்கு விகிதாசாரம் 40 சதவிகிதம். 

வாக்கு வித்தியாசம் 20 சதவிகிதத்துக்கு மேல் இருந்தாலும், உறுதியாக ராம்நாத்தான் வெல்வார் என்று கட்டியம் கூறிவிட முடியாது. வலுவான அணி தோல்வியுற்ற உதாரணங்களும் நம் வரலாற்றில் இருக்கிறது. 1969-ம் ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் நீலம் சஞ்சீவ ரெட்டியைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகக் களம் இறக்குகிறது. இந்திரா காந்தியால் ஆதரிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரி, அவருக்கு எதிராகக் களம் காண்கிறார். அப்போது இந்திரா காந்தி, காங்கிரஸ் பிரதிநிதிகளிடம்...  “மனசாட்சியின்படி வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார். கிரி வெல்கிறார். 48 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே வரலாறு திரும்பினால் மட்டும்தான் மீரா வெல்ல வாய்ப்பிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்