வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (28/06/2017)

கடைசி தொடர்பு:13:39 (28/06/2017)

நிதி ஆண்டு, ‘ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை’யாக மாறுவது விவசாயிகளுக்கு உதவுமா?

ற்போதைய நிதி ஆண்டாக ஏப்ரல் மாதம் முதல் தேதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை கடைப்பிடித்து வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டும் காலண்டர் ஆண்டும் ஒரே முறையில் இருக்கும் வகையில், மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.

அடுத்த  நிதி ஆண்டு என்பது, ஜனவரி மாதம் 1-ம் தேதி ஆரம்பித்து டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடையும். இதை மாற்றியமைக்க, பொருளாதார நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கியிருக்கிறது. இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான சட்டமசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஆண்டு மாற்றம்


‘நிதி ஆண்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதால் என்ன நன்மை?' என்பது குறித்து, பொருளாதாரத் துறை வல்லுநரும் வருமானவரித் துறை அதிகாரியுமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். 

“இங்கிலாந்தில் நிதி ஆண்டாக, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவை, பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்யும்போது இதை அமல்படுத்தினார்கள். இன்னமும் நாம் அதையே கடைப்பிடித்துவருகிறோம். ஆனால், ஆங்கிலேயர்களே இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். சுதந்திரம் பெற்ற பிறகு 1954-ம் ஆண்டு பிரதமர் நேரு, ‘நிதி ஆண்டை ஜூலை மாதத்துக்கு மாற்றி அமைக்கலாம்’ என ஆலோசனை வழங்கினார். ஆனால், அவரின் கோரிக்கையை அப்போது இருந்த அமைச்சரவை ஏற்கவில்லை. 1966-ம் ஆண்டு முதலாவது சீர்திருத்தக் குழு, நிதி ஆண்டை மாற்றி அமைக்க ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனையையும் நிராகரித்துவிட்டார்கள்.

1983-ல் நிதி ஆண்டை மாற்றி அமைப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது மத்திய அரசு. நிதி ஆண்டை மாற்றியமைக்க பல மாநில முதலமைச்சர்களும் ஆதரவு தெரிவிக்க, 1984-ம் ஆண்டு எல்.கே.ஜா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது மத்திய அரசு. அந்த கமிட்டி தன் பரிந்துரையாக `ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நிதி ஆண்டாக மாற்றி அமைக்கலாம்' என்று ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால், அந்தப் பரிந்துரையும் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் நிறைவேற்றப்படவில்லை.

2015-ம் ஆண்டு முதல் தொடர் வறட்சியால் பல மாநிலங்களுக்குத் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, மீண்டும் நிதி ஆண்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அந்தக் கோரிக்கைக்கு முடிவுகாணும் வகையில் பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு.

நிதி ஆண்டு மாற்றம் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்திஅந்த நிபுணர் குழுவில் திட்டக்குழு உறுப்பினர், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், விவசாயப் பொருள்களின் விலை நிர்ணயக் குழுவின் தலைவர், வர்த்தக நிறுவன அமைப்புகளின் பிரதிநிதி, நான்கு மாநிலங்களின் நிதிச் செயலாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் பல்வேறு தரப்பின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதை அரசிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தார்கள். அந்தக் குழு `ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நிதி ஆண்டாக அமைப்பது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவும்' எனப் பரிந்துரை செய்திருக்கிறது" என்று நிதி ஆண்டை மாற்றி அமைப்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்த பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, நிதியாண்டை எதற்காக மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும் விவரித்தார். 

“இந்தியாவில் 60 சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்கள், விவசாயம் சார்ந்துதான் இருக்கின்றனர். விவசாயம், பருவமழையை நம்பி இருக்கிறது. வேளாண் உற்பத்தியை, பருவமழையே தீர்மானிக்கிறது. ஆகையால், வேளாண் உற்பத்தியை மையமாக வைத்து பட்ஜெட்டை முடிவுசெய்ய வேண்டும். ஆனால், தற்போது பருவமழை பொய்த்துவருவதால் சரியான வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் அரசின் திட்ட உதவிகளை விவசாயிகளால் சரியான நேரத்தில் பெற முடிவதில்லை. ஒருவேளை அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் நிதி தேவைக்காகப் பிற அமைப்புகளிடம் கடன் பெறவேண்டிய நிலை ஏற்படுகிறது. 

நிதி ஆண்டு மாற்றம்

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மழைக்காலமாக இருக்கிறது. இந்தக் காலத்தில் இந்தியாவின் வேளாண் உற்பத்தியும் சிறப்பாக இருந்திருக்கிறது. 85 சதவிகிதம் அரிசி உற்பத்தியைக்கொண்ட `கரீப்' பருவம் முடிவடைவதும், 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக கோதுமை உற்பத்தி நிர்ணயிக்கும் `ரபி' பருவத்தின் போக்கும் நவம்பர் மாதத்திலேயே தெரிந்துவிடும். இதைக் கணக்கில்கொண்டு நவம்பர் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சரியான வகையில் நிதியை ஒதுக்கீடு செய்து உதவ முடியும். இதற்காக மத்திய அரசு நிதி ஆண்டை மாற்றி அமைப்பது நல்ல விஷயமே” என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

ஆக, அடுத்தடுத்து வரும் பட்ஜெட்கள் வேளாண் மக்களுக்கான பட்ஜெட்டுகளாக அமைந்தால் மகிழ்ச்சியே! 


டிரெண்டிங் @ விகடன்