வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (29/06/2017)

கடைசி தொடர்பு:11:19 (03/07/2017)

ராம்நாத், மீரா குமார் சுற்றுப்பயணம்: பரபரக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத்தலைவர் வேட்பாளர்கள்

குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரும் இத்தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

ராம்நாத் கோவிந்தைப் பொறுத்தவரை மாநிலங்களவை உறுப்பினராகவும், பி.ஜே.பி-யின் தலித் மோர்ச்சா நிர்வாகியாகவும் பதவி வகித்த அனுபவம் பெற்றவர். மேலும், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இருந்த அனுபவம் வாய்ந்தவர் என்பதற்கு அப்பாற்பட்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்பதாலேயே, அவரைக் குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தி, தனது கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்லாது, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநிலக்கட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது பி.ஜே.பி.

குடியரசுத்தலைவரை அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பி.ஜே.பி-யின் முயற்சி முடியாமல் போய் விட்டது. என்றாலும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக பி.ஜே.பி நிறுத்தியிருப்பதன் மூலம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டது பி.ஜே.பி.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, பி.ஜே.பி-யைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கோரியபோதே, எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்போகும் தகுதியுடைய வேட்பாளர் ஒருவரை அறிவித்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகளின் தாமதத்தைப் பயன்படுத்திக் கொண்ட பி.ஜே.பி, தங்களுக்குச் சாதகமான வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக வேட்பாளரைத் தேர்வுசெய்து அறிவிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. எனினும், தங்களின் தகுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. மீரா குமாரைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பதோடு, தலித் தலைவரான முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் என்பதும் கூடுதல் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. இதனால், இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் தலித் பிரிவைச் சேர்ந்த இரு வேட்பாளர்களுக்கு இடையே நடைபெறக்கூடியதாக பொதுவில் பார்க்கப்பட்டாலும், மதவாத பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டிருப்பதாகவே கருத வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு, நாடு முழுவதும் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி விட்டார். பொதுவாக குடியரசுத்தலைவர் தேர்தலில்வேட்பாளராகப் போட்டியிடுவோர், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களின் ஆதரவைக் கோருவது வழக்கம்.

அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடங்கி பல்வேறு மாநிலங்களுக்கும் ராம்நாத் கோவிந்த் சென்று, தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் அவர் ஆதரவு திரட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர், ஜூலை முதல் தேதி சென்னை வந்து ஆதரவு திரட்ட உள்ளார். சென்னையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ராம்நாத் ஆதரவு கேட்கவுள்ளார். சென்னையைத் தொடர்ந்து, புதுச்சேரி செல்லும் ராம்நாத் கோவிந்த், பின்னர் கேரள மாநிலத்துக்குச் சென்று எம்பி., எம்எல்ஏ-க்களின் ஆதரவைத் திரட்டுகிறார். பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு கோருகிறார். ஏற்கெனவே ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் தலைவர்களுக்குத் தனது நன்றியையும் ராம்நாத் கோவிந்த் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் மீரா குமார், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் மனுத்தாக்கலின்போது உடனிருந்தனர். மீரா குமாரும் தனக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று கட்சிகளின் தலைவர்கள், எம்பி, எம்எல்ஏ-க்களைச் சந்திக்கவுள்ளார். அந்தவகையில், ஜூலை முதல்வாரத்தில் மீரா குமார் சென்னை வருகிறார். அப்போது, தி.மு.க தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.

எப்படி இருப்பினும், நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டி என்பது உறுதியாகி விட்ட நிலையில், அனைத்து மாநில தலைநகரங்களிலும் எம்பி., எம்எல்ஏ-க்கள் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜூலை 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்