வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (29/06/2017)

கடைசி தொடர்பு:08:30 (29/06/2017)

ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு சிறு மாற்றங்களுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது.


ஏறக்குறைய 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம்குறித்த பரிந்துரைகளை, ஏழாவது சம்பள கமிஷன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், அதில் 34 மாற்றங்களுடன் அந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அமைச்சரவை.


வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ஊதிய மாற்றத்தினால், அரசுக்கு கூடுதலாக 30,748 கோடி ரூபாய் வருடத்துக்கு அதிகச் செலவாகும் என்று அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். மேலும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்ததை அமல் செய்தால், 29,300 கோடிதான் செலவாகும். ஆனால், அமைச்சரவை அதில் சில மாற்றங்கள் செய்துள்ளதால், கூடுதலாக 1,448  கோடி ருபாய் செலவு ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வீட்டு வாடகை, உடை போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கு கூடுதலாக தொகை கணக்கிடப்பட்டுள்ளது. பென்ஷன் பெறுவோருக்கான மருத்துவச் செலவு, கமிஷன் பரிந்துரைத்ததைவிட ஒரு மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. சம்பள கமிஷன் 500 ருபாய் பரிந்துரைத்திருந்த நிலையில், அதை 1,000 ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.  மேலும், நக்சல் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும் அதிகப்படியான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.