வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (29/06/2017)

கடைசி தொடர்பு:15:15 (29/06/2017)

“டிஜிட்டல் இந்தியாவிலும் கையால்தான் மலம் அள்ள வேண்டுமா?” #AnnihilateCaste #EndManualScavenging

டிஜிட்டல் இந்தியாவில் கையால் மலம் அள்ளுபவர்கள்

வீட்டு வாசலில் ஒரு பாதாளச் சாக்கடை இருக்கிறது. அதில், ஒரு நபர் மேல் துணியில்லாமல் வெறும் கோமணத்துடன் இறங்கி மலத்தையும் கழிவுகளையும் கைகளால் அள்ளிப்போட்டு சுத்தம் செய்துகொண்டிருக்கிறார். இப்படியான காட்சியை வெறுமனே பார்த்தபடி அன்றாடம் எத்தனை பேர் கடந்திருப்போம்?. அப்படி ஒரு நிமிடத்தில் நாம் கடந்துசெல்வது பல மணி நேரம் அவர்கள் அனுபவிக்கும் நரக வாழ்க்கையை. பல்வேறு வீடுகளில் இருந்து ஒன்றாக வெளியேறும் கழிவுகளை, அதன் நாற்றத்தைச் சுவாசித்தபடியே குழிக்குள் இறங்கி இரண்டு கைகளால் அள்ளியெடுத்து அப்புறப்படுத்த வேண்டும். பல மணி நேர வேலைக்குப் பின் குளித்து முடித்துவிட்டு தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு பின்பு, அதே கரங்களால்தான் அவர்கள் உணவு உண்ண வேண்டும்.

நிற்க! நாம் இதனைச் செய்வோமா? நினைத்தாலே அருவருப்பை ஏற்படுத்தும் இச்செயலை நம்மைப்போன்ற சக மனிதர்களைச் செய்யச் சொல்லிப் பணிப்பது எந்த வகையிலான நீதி? முன்னேற்றம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும் சாக்கடைகளை அள்ள மனிதக் கரங்கள்தான் தேவையா? இது தொடர்பான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜெய் பீம் மன்றம் ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என்னும் மொழிப்பெயர்ப்புக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ‘மஞ்சள்’ என்னும் நாடகத்தை அரங்கேற்ற இருக்கிறது. நாடகக் குழுவினரோடு இணைந்து பல்வேறு தரப்பினரும் சாதி ஒழிப்புக்காகவும், கையால் மலம் அள்ளும் அவலத்தை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும் குரல் கொடுத்துள்ளனர். 

மஞ்சள்

.

எழுத்தாளர் மதிமாறன்:

மதிமாறன்''கையால் மலம் அள்ளும் அவலத்தைத் தடுத்து நிறுத்துபவர்கள் மட்டுமே சாதி ஒழிப்புப் பற்றிப் பேசத் தகுதியானவர்கள். அரசு நினைத்தால் ஓர் இரவில், ஒரேயொரு கையெழுத்தில் அந்த மக்களின் இழிநிலையை மாற்றிவிட முடியும். அவர்கள் மலம் அள்ளுவதைத் தவிர்த்து, வேறு அரசுப் பணிகளில் உடனடியாக அமர்த்தப்பட வேண்டும். அதை இந்த அரசு செய்ய முன்வரவேண்டும்''.

நடிகர் ஜான் விஜய்:

ஜான் விஜய்''பென்சில் சீவுவதற்குக்கூட மெஷின் இருக்கிறது. ஆனால், நம்முடைய மலத்தை யாரோ ஒரு மனிதன் இன்னும் கையால்தான் அள்ளிக்கொண்டிருக்கிறான். இதுதான் நாட்டின் முன்னேற்றமா? ஒரு மனிதனை, நம் மலத்தை அள்ளவைத்துவிட்டு நாம் மட்டும் நல்லபடியாக வாழ்வது நிச்சயமாக நாட்டு முன்னேற்றமாக இருக்க முடியாது. உடனடியாக இந்தச் சாதிய இழிவுக்கு முடிவுகட்ட வேண்டியது அவசியமாகிறது''.ராம்

ராம், திரைப்பட இயக்குநர்: 

''கையால் மலம் அள்ளும் அவலம் நம் நாட்டைத் தவிர, வேறு எங்கும் இல்லை. மனிதன் மலம் அள்ளுவதைத் தவிர்க்க, மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் அரசே... அறிவுபூர்வமான, ஜனநாயகமான அரசாக இருக்க முடியும்''.

நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்:

நல்லகண்ணு''இவ்வளவு நாகரிகமான காலகட்டத்திலும் கையால் மலம் அள்ளும் தொழிலில் மக்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது, பரம்பரையான தொழில், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இதில் ஈடுபடவேண்டும் என்கிற நிலையில்தான் நம் நாடு இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்''.

நடிகர் சத்யராஜ்:

சத்யராஜ்''இந்த உலகத்தில் இருக்கும் உயிர்களிலேயே மிகவும் மோசமானக் கழிவுக்குச் சொந்தக்காரன் மனிதன் மட்டுமே. அந்தக் கழிவை அள்ளுவதற்கு வேறொரு மனிதனை இறக்குவது மிகவும் கேவலமானச் செயல். கழிவுகளை அகற்ற எப்போதோ கருவிகளைக் கண்டுபிடித்திருக்க முடியும். வெளிநாடுகளில் கருவிகள்தான் சுத்தம் செய்கின்றன. ஆனால், நம் நாட்டில்தான் சாதியைத் தக்கவைத்துக்கொள்ள இன்றளவும் குறிப்பிட்டச் சமூகத்தைச் சேர்ந்த மனிதர்களை மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறோம். இந்த அவலம் ஒழிய சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்''.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்