தந்தையையும் இழந்தார் 'லிட்டில்' தாமினி!

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபு கோலி. ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. கடந்த 2012-ம் ஆண்டு பரத்பூர் மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த இவரின் மனைவி இறந்துபோனார். குழந்தையைப் பார்த்துக்கொள்ள யாருமில்லாத நிலையில், தன் கழுத்தில் தொட்டில் கட்டிக்கொண்டு, அதில் குழந்தையைப் படுக்க வைத்துக்கொண்டே ரிக்ஷா ஓட்டுவார். அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தக் குழந்தையின் பெயர் தாமினி.

தாமினி பற்றிய செய்தி வெளியானதும் ஏராளமானோர் பாபு கோலிக்கு நிதியுதவி செய்ய முன்வந்தனர். தொழிலதிபர் ஒருவர் தாமினியின் பெயரில் 23 லட்சம் ரூபாய் ஜெய்ப்பூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானிர் வங்கியில் டெபாஸிட் செய்தார். பின்னர், குழந்தை தாமினி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்தது. தற்போது, அந்தக் குழந்தைக்கு 4 வயதான நிலையில், தந்தை பாபு கோலியும் இறந்துவிட்டார். பரத்பூரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக அவர் கிடந்ததைப் பார்த்து, அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மனைவியை இழந்த நிலையில், பாபு அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்துபோனதாகச் சொல்லப்படுகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் உடல் அடக்கம்செய்யப்பட்டது.

குழந்தை தாமினியைப் பராமரிக்க, ராஜஸ்தான் அரசு ஐந்து பேர்கொண்ட குழுவை அமைத்திருந்தது. குழுவின் பராமரிப்பில் தற்போது சிறுமி தாமினி இருக்கிறாள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!