இவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாயிருக்கும்! ஜிஎஸ்டி குறித்து அதிரும் ப.சிதம்பரம் | This is not real GST, says P.Chidambarm

வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (01/07/2017)

கடைசி தொடர்பு:14:18 (01/07/2017)

இவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாயிருக்கும்! ஜிஎஸ்டி குறித்து அதிரும் ப.சிதம்பரம்

'தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி, உண்மையான ஜிஎஸ்டி அல்ல' என்று முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


ஜிஎஸ்டி வரி குறித்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர், 'மதிப்புக் கூட்டு வரியை 2005-06-ம் ஆண்டிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு, 2006-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தினோம். 2010-ம் ஆண்டுக்குள் ஜிஎஸ்டி-யை நடைமுறைப்படுத்திவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அது முடியாமல்போனது. நாங்கள் அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி-க்கு பா.ஜ.க. கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது.

குஜராத் மற்றும் மத்தியப்பிரதேச பா.ஜ.க. அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஜிஎஸ்டி-யை காங்கிரஸ் எதிர்ப்பது போன்று சித்திரிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜிஎஸ்டி, நாட்டுக்கு நல்லது. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஜிஎஸ்டி, உண்மையான ஜிஎஸ்டி அல்ல. இந்த ஜிஎஸ்டி, பல்வேறு குழப்பங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எந்த வியாபாரி எந்த அரசுக்கு வரி செலுத்தவேண்டும் என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் அதன் வீரியம் தெரியும்.

தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஜிஎஸ்டியால் சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வரி குறித்து விளக்கப்படவில்லை. அவர்கள் கேட்ட கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டியால், 80 சதவிகித  பொருள்களுக்கு மேல் விலை அதிகமாக இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அதனுடைய நகர்வு தெரியும்.

பெட்ரோல், மின்சாரம், மதுபானம் இந்த வரிமுறைக்குள் வரவில்லை. இப்படி இருக்கும்போது நாட்டின் பொருளாதாராம் எப்படி அதிகரிக்கும். ஆக பழைய வரிமுறை சேவை வரி ஜிஎஸ்டி இந்த மூன்று வரிமுறையும் இருக்கும். ஜிஎஸ்டி வந்து என்ன பயனிருக்கு. ஜிஎஸ்டி மூன்று விகிதங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் பல விகிதங்களாக பிரித்திருக்கிறார்கள். நிலையான விலைக்கு 18 சதவீகிதம் அறிவித்திருக்கிறார்கள். உலக நாடுகளோடு ஒப்பிட்டால் இது அதிகம். இந்த ஜிஎஸ்டி உண்மையானது அல்ல. இந்த வரியை யார் நிர்வாகம் செய்யப்போகிறார்கள். மத்திய அரசா, மாநில அரசா என்கிற விவரம் இல்லை. ஒன்னறைக்கோடிக்கு வியாபாரம் செய்வோர் மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவார்கள். இரண்டுகோடிக்கு மேல் வியாபாரம் செய்வோர் யாருடைய கட்டுப்பாட்டில் வருவோம்னு தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். ஏழு மாநிலங்களில் தொழில் செய்பவர், ஏழு மாநிலங்களிலும் தலா 36 ரிட்டன்ஸ் பைல் செய்ய வேண்டும். பிறகு எப்படி தொழில்வளர்ச்சி ஏற்படும், வேலைவாய்ப்பு கிடைக்கும். சமரசம் என்கிற பெயரில் விசித்திரமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். இது போகபோகத்தான் தெரியும்.

வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டக்கூடாது என நினைக்கிறார்கள். இந்த வரிமுறையால் அதிகார மையம் உருவாக்க போகிறார்கள். இது போன்ற மோசமான மசோதா இருக்க முடியாது. மத்திய அரசுக்கு சந்தைப்படுத்துதலில் நம்பிக்கை இல்லை என்பதைதான் காட்டுகிறது. இது அதிகாரிகளின் கையில் கிடைத்த ஆயுதம். நிபுணர்கள் வடிவமைத்துக்கொடுத்த ஜிஎஸ்டி அல்ல. நிச்சயமாக பணவீக்கம் ஏற்படும். மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வரிமுறைக்கான சோதனை ஓட்டம் வெறும் இருநூறு வியாபாரிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களோ, சிறு, குறு வியாபாரிகளோ இந்த வரிமுறையே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை" என்றார்.