எதிர்கட்சிகளின் ஒற்றுமையை உடைத்த ஜி.எஸ்.டி! குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிரொலிக்குமா..? | Opposition disintegrate in participating GST launch function held in Parliament!

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (02/07/2017)

கடைசி தொடர்பு:18:15 (02/07/2017)

எதிர்கட்சிகளின் ஒற்றுமையை உடைத்த ஜி.எஸ்.டி! குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிரொலிக்குமா..?

ஜி எஸ் டி விழாவில் எதிர்க்கட்சியினர்

ந்தியா முழுமைக்கும் 'ஒரே வரி; ஒரே சீர்திருத்தம்' என்ற அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி அறிமுக விழாவில், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. எனினும், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீரா குமாரை வேட்பாளராக ஆதரித்த தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், இவ்விழாவில் பங்கேற்றது காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான மீரா குமார், குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். ஆனால், மீரா குமாரை ஆதரித்த எதிர்க்கட்சிகளில் ஒரு சில கட்சிகள், ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட விழாவில் மத்திய அரசின் அழைப்பை ஏற்றுக் கலந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரா குமாருக்கு ஆதரவாக காங்கிரஸுடன் கைகோத்த தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் நேற்றிரவு நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி அறிமுக விழாவில் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, கடைசிநேரத்தில் ஜி.எஸ்.டி விழாவில் பங்கேற்றதாகத் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். என்றாலும், இந்த விழாவில் காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.

ஜி.எஸ்.டி அறிமுகம்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவுடன் முன்வரிசையில் அமர்ந்து பங்கேற்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், பி.ஜே.பி-யிடம் ஆட்சியை இழந்த சமாஜ்வாடிக் கட்சியும் ஜி.எஸ்,டி அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டது. இது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளரை ஆதரித்த ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் நேற்றைய நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடதுசாரிக் கட்சிகள் புறக்கணித்த போதிலும் ஜி.எஸ்.டி கமிட்டிக்குத் தலைமை வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் மேற்குவங்க நிதியமைச்சருமான ஆசிம்தாஸ் குப்தா நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டார்.

காங்கிரஸ் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளை ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பங்கேற்க அரசுத்தரப்பில் அழைப்பு விடுத்தபோதிலும், தொடர்ந்து அக்கட்சிகள் பிடிவாதத்துடன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டன.

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அரைவேக்காட்டுத்தனமாக, முன்னேற்பாடு இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறை கூறியுள்ளார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக்கட்சிகளும் ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதைக் குறை கூறியுள்ளனர்.

ஜி.எஸ்.டி அறிமுக விழா எதிர்க்கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது. 17 எதிர்க்கட்சிகள் இணைந்து குடியரசுத் தலைவர் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்ற நிலையில், அந்த ஒற்றுமை ஒருவார காலத்துக்குள் பிசுபிசுத்துப் போய் இருப்பது, அனைத்துத் தரப்பினரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. ஜி.எஸ்.டி வரி நடைமுறையிலேயே இந்தநிலை என்றால், விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் நிலை என்னவாகுமோ என்ற கேள்வியும் எழுகிறது. அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்