அத்தி மரங்களை சீர்படுத்த ஆணையிட்ட ஆதித்யநாத் அரசு!

உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு செய்துவருகிறது. முதல்கட்டமாக யாத்திரீகர்கள் செல்லும் வழியெங்கும் சிசிடிவி கேமராக்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை தான் தற்போது பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் ஆதித்யநாத் அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது. 

’விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுணம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்’ என்று குறிப்பிட்டு ஆதித்யநாத் இந்த உத்தரவை விதித்துள்ளார். மேலும், யாத்திரையின் போது மோசமான வார்த்தைகள் நிறைந்த பாடல்களையும் கேட்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மரத்தை அபசகுணமாகக் கூறப்படும் கருத்தை அரசு ஆதரித்து இருப்பது மூடநம்பிக்கையின் உச்சகட்டம் என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பொதுநிலையில் இருக்க வேண்டிய அரசு இவ்வாறு மூடநம்பிக்கைகள் சார்ந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், முதல்வர் ஆதித்யநாத்துக்கு ஆதரவாகவும் பல கருத்துகள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன.

முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அத்தி மரங்களை அகற்றக்கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் முதல்வர் யாத்திரை வழியில் உள்ள மரங்களை சீர்படுத்தக் கூறியதாக மட்டுமே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!