கட்டுக்கட்டான கோப்புகள் இனி இல்லை: டிஜிட்டல்மயமாகும் உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை அமைப்பின் முதல் முயற்சியான `டிஜிட்டல் மயமாக்குதல்’ திட்டம், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம், காகிதங்கள் இன்றி டிஜிட்டல்மயமாக இருக்கிறது. இந்த சீரிய முயற்சியை பிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர், சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இதர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து, கடந்த மே மாதம் தொடங்கிவைத்தனர். இந்தப் புதிய முறையின்மூலம் வழக்குத் தொடுப்பவர்கள், இனி வருங்காலங்களில் தங்கள் வழக்கு நிலவரம் குறித்து ஆன்லைனிலேயே தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

`கட்டுக்கட்டாக வழக்குகளின் கோப்புகள் நிறைந்து காணப்படும் நிலை இனி இல்லை. இது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத முயற்சியும்கூட’ என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் தெரிவித்துள்ளார். இதனால், இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் எந்தவோர் அச்சடிக்கப்பட்ட கோப்புகளுக்கும் இடமில்லை என்பது தெரியவருகிறது. இந்தப் புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றத்துடன் இணைந்து, 24 உயர் நீதிமன்றங்களும் அதன் கிளை மன்றங்களும் பின்பற்றும் என்றும், ஒவ்வொரு மத்திய, மாநில அரசுத்துறையும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது, பொது மக்களுக்கு இதுகுறித்த விழிப்புஉணர்வும் பயன்பாட்டு முறையும் தெரிய வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை அமைப்பு, உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் இரண்டு உதவி மையங்களைத் தொடங்கியுள்ளது. விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!