Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"இந்தத் தண்ணிய அவங்க குடிச்சிட்டு பேசட்டும்!” - நியாயம் கேட்கும் கதிராமங்கலம் #SpotReport #SaveKathiramangalam

நரிமணம் வெள்ளப்பாக்கம் சூசை

சூசையை உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால், பன்னாட்டு அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கான காரணத்தில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை, நாட்டின் அதிகபட்ச எரிபொருள் விற்பனை என்பது வெறும் மண்ணெண்ணெயாக மட்டுமே இருந்தது. இது, சமையலுக்காகவும், விளக்கேற்றவும் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால், இயந்திரமயமாக்கலுக்குப் பிறகான நிலைவேறு. இன்றைய தேதியில், பெட்ரோலியப் பொருள்களின் மொத்தவிற்பனை வருடத்துக்கு ஒன்றரை மில்லியன் டன். ஒரு நாட்டின் ஆதிக்க அரசியலை, அந்த நாட்டின் வளமும் மற்றும் அதுசார்ந்த பொருளாதார வளர்ச்சியும்தான் நிர்ணயிக்கின்றன. அந்த அரசியலின் அடிப்படையில்தான், 1955-ம் ஆண்டில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் இந்திய அரசால் நிறுவப்பட்டதும். 
அஸாம் போன்ற வடகிழக்குப்பகுதி மாநிலங்களிலேயே அதுவரை எரிபொருள் எடுக்கப்பட்டுவந்த நிலையில், 1984-ல் ஓ.என்.ஜி.சி நிறுவனமும், 1993-ல் சி.பி.சி.எல் நிறுவனமும் எண்ணெய் எடுப்பதற்காக நாகை மாவட்டம் நரிமணத்தை நோக்கி படையெடுத்தபோது, இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தங்களின் நிலங்களைத் தாரை வார்த்தவர்களில் சூசையும் ஒருவர். உண்மையில் இந்தியா வளர்ந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை, இந்திய வளர்ச்சிக்காகத் தங்களின் நிலங்களில் இருந்து எண்ணெய் உறிஞ்சப்பட்டு, மண்வளம் பாழானதும் அவர்களுக்குப் புரியவில்லை. 

எண்ணெய் கலந்த நிலத்தடி நீர்

முப்பது வருடங்களுக்கு முன்பு நிலத்தடி நீர் செழித்திருந்த அதேஇடம், தற்போது உப்பும் எண்ணெயும் கலந்து எப்போதுமே உபயோகப்படுத்தமுடியாத அளவுக்கு மாசடைந்த நீராகிக் கிடக்கிறது. ஆனால், நரிமணம் பகுதி மக்கள் அந்த நீரைத்தான் உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். "இதைக் குடிச்சுப் பாருங்கம்மா...எங்கேயாவது வாயில் வைக்க முடியுதான்னு சொல்லுங்க?” என்று சொல்லி, ஒரு மூதாட்டி செம்புத் தண்ணீரை நீட்டுகிறார். தண்ணீர் நம் தொண்டைக்குழியைத் தொடும்போதே, அதில் உள்ள தாதுக்களும் எண்ணெயின் கொழகொழப்பும் கலந்து குமட்டல் ஏற்படுகிறது. முப்பது வருடங்களாகவே ஒரு ஊர் முழுவதும் இதுபோன்ற எண்ணெய் கலந்த நீரைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால், இந்தியா 2020 என்கிற இலக்கெல்லாம் எதற்கு என்கிற கேள்வியே எழுகிறது. நரிமணம் கிராமத்தின் இதுபோன்ற நிலைதான், அதன் இருபுறமும் இருக்கும் கிராமங்களான பூதங்குடி மற்றும் பனங்குடிக்கும். பசுமை விளைந்து கிடந்த அந்த டெல்டா பகுதி நிலங்கள்தான் தற்போது விளைச்சல் பொய்த்துக் கிடப்பதற்கான அடையாளம். சூசைக்குத் தற்போது சுமார் 80 வயது இருக்கும். விவசாயம் தவிர, வேறு எதுவும் தெரியாத சூசை, தனது பிழைப்பும்போய் நிலமும் பறிபோய் தற்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெறுமனே வேடிக்கை பார்த்தபடிதான் தனது அன்றாட வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார். “அவருக்கு ஒண்ணுமே தெரியாதுங்க... இந்த எண்ணெய் கம்பெனிக்காகக் கேட்டாங்கனு, அப்பவே நிலத்தைக் கொடுத்துட்டாரு. அதுக்கப்புறம் அங்க, இங்கன்னு கூலிவேலை செஞ்சுதான் அவரின் வயித்துப் பொழப்பு ஓடுச்சு. வயசாகிட்டதால இப்போ, எந்தவேலையும் செய்யறதில்லை; கூடவே ஞாபகமறதியும் வந்துடுச்சு” என்கிறார்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள்.

எண்ணெய் கலந்த தண்ணீரை குடித்து வாழும் குழந்தைகள்

"நிலங்களைத் தாருங்கள்; அதன்மீது எழுப்பப்படும் நிறுவனத்திலேயே உங்களுக்கு வேலைதருகிறோம்" என்று ஆசைவார்த்தைகூறிய சி.பி.சி.எல் நிறுவனம், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலைகொடுத்து பெயரளவில் கணக்குக் காண்பித்துள்ளது. பிறகு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல், அவர்கள் அப்படியே விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். தூரத்தில் உயரமாக பெட்ரோல் எடுக்கும் குழாய் எரிந்துகொண்டிருக்க, அதைச் சுட்டிக்காட்டியபடியே பேசுகிறார்கள் கிராம மக்கள். "இது, இங்க வந்ததால எங்க வாழ்க்கை எப்படியோ பாழாய்போச்சு. சுத்துப்பட்டு கிராமம் எந்தப்பகுதியிலுமே இதனால நல்லதண்ணீர் கிடையாது. நாங்க, இந்தத் தண்ணிய உபயோகப்படுத்திக்கிட்டாலும், பிள்ளைங்களுக்கு இதையே தரமுடியாது இல்லையா? அதனால, இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர் வரை நடந்துபோய் அங்க ஒரு மாதா கோயில் இருக்கு. அங்கிருந்துதான் தண்ணீர் எடுத்துட்டு வர்றோம்” என்றார்கள். கூடவே, "தங்கள் பிள்ளைகளுக்கு மாசுபட்ட அந்தத் தண்ணீரினால் உடல்பாதிப்பு ஏற்படுகிறது" என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. முன்னேற்றம் என்கிற பெயரில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதுதான் வளர்ச்சிக்கான பாதையா? 

நரிமணமாகும் கதிராமங்கலம்!

முப்பது வருடங்களுக்கு முன்பு பசுமைசூழ்ந்து கிடந்த நரிமணம்தான் தற்போதைய கதிராமங்கலத்தின் சூழல். காவிரி ஆற்றுப்படுகை என்பதால், கிராமத்தின் சாலைகளின் இருபக்கமும் நெல்வயல் செழித்துக் கிடக்கிறது. இந்த செழிப்பின் நடுவேதான் அவ்வப்போது நெருப்பு பற்றிக்கொண்டு எரிகிறது. நிலத்துக்கு அடியில் இருக்கும் மீத்தேன் வெளியேறுவதால்தான், தங்களது நிலங்கள் இப்படித் திடீரென்று பற்றிக்கொண்டு எரிவதாகக் கூறுகிறார்கள் அங்கே தற்போது போராடிக் கொண்டிருக்கும் மக்கள். அவர்கள் கூறுவதற்கு ஏற்றாற்போல் தண்ணீர் உபயோகத்துக்கு தகுதியில்லாமல் மாசுபட்டுக் கிடக்கிறது. போராடிக்கொண்டிருக்கும் பெண்களில் ஒருவரான குணசுந்தரி பேசுகையில், "தொலைக்காட்சியில் பேசுபவர்கள் 'கதிராமங்கலத்தில் மக்கள் வேண்டுமென்றே கலவரம் செய்கிறார்கள்' என்று பேசுகிறார்கள். அவர்கள் இங்கு களத்திற்கு நேரடியாகவந்து நாங்கள் குடிக்கும் தண்ணீரைக் குடித்துப்பார்த்து விட்டுப் பேசட்டும்" என்று கூறி மஞ்சள் பழுப்பேறிக் கிடக்கும் தண்ணீரைக் காண்பிக்கிறார். 

குணசுந்தரிஅண்மையில் அங்கே போலீஸார் நடத்திய தாக்குதலில் அடிப்பட்டு கால்களும், தொடைகளும் கன்றிப்போய் நிற்கவும்முடியாமல், உட்காரவும் முடியாமல் வலியுடன் கண்ணீர் மல்கத் தொடர்கிறார் குணசுந்தரி, "எங்க நிலமெல்லாம் ஆபத்துல இருக்குன்னுதான், நாங்க அமைதியான வழியில போராடினோம். ஆனால், போலீஸார் வேண்டுமென்றே எங்களோட நிலங்களைக் கொளுத்திவிட்டுட்டு, எங்கமேல பழியப் போட்டுட்டாங்க...ஆனா, அன்றைக்கு அத்தனை தொலைக்காட்சியிலும், கலவரக்காரர்கள் நிலத்தைக் கொளுத்திவிட்டார்கள் அப்படின்னு செய்தி போடறாங்க. வீட்டுல சிலிண்டர் வெடிக்கற மாதிரி இருந்தா பிள்ளைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு, உடனே அந்த இடத்தை விட்டு ஓடுவோம். ஆனால், உயிர்போனால் போகட்டும்னு, அதே இடத்திலேயே இருப்போமா? இங்க கதிராமங்கலத்துல இருக்கற நாங்க அத்தனை பேரும் அப்படியான ஆபத்துக்கு நடுவில்தான் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வாழுகிறோம்" என்கிறார்.

இரண்டாம் உலகப் போர் காலங்களில் ஹிட்லர், யூதர்களைக் கூட்டம்கூட்டமாக கொல்வதற்கு ஹைட்ரஜன் சயனைடு வாயுவைப் பயன்படுத்திய வரலாறு நமக்குத் தெரியும். அதை சுவாசித்த நிமிடத்தில் மூளை தாக்கப்பட்டு செயலிழக்கும். ஓரிரு நிமிடங்களில் இறப்பு ஏற்படும். அம்மோனியா, மீத்தேன், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கூட்டுக் கலவைதான் இந்த ஹைட்ரஜன் சயனைடு. கதிராமங்கலத்து நிலங்களில் இருக்கும் ஆக்ஸிஜனும், அம்மோனியாவும் இந்த மீத்தேன் வாயுவுடன் கலக்கும்போது, நிலம் அரித்து அந்தநிலத்தில் சுவாசிக்கும் உயிரையும் சேர்த்து அழித்துவிடும் ஆபத்து உண்டு. இங்கே ஹிட்லர் இல்லையென்றாலும் சூழல் கெடுக்கும் அரக்கத்தன்மைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தைத்தான் மக்கள் தற்போது கையில் எடுத்துள்ளார்கள்...

கதிராமங்கலம் காப்போம்! சூழல் பேணுவோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement