Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"சாதி அடையாளம் வேண்டாம்!" மணமக்கள் இருவரும் தமிழ்த்தாலி கட்டிக்கொண்ட வித்தியாச திருமணம்

திகாலை ஆறு மணி. பாண்டிச்சேரி கடற்கரையில் மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது அந்த மணமேடை. சுற்றமும் உறவுகளும் சூழ்ந்திருக்க, பறை முழங்க, தங்கப்பல்லக்கொன்று வந்திறங்கியது. அதுவரை மேடையில் அமர்ந்திருந்த மணமகன் எழுந்து சென்று பல்லக்கின் திரையை விலக்கினார். தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் சிவப்பு வண்ணப் பட்டாடையில் வந்திறங்கிய மணமகளை, அவர் கைகளில் ஏந்தி மேடைக்குத் தூக்கிச் செல்ல, சுற்றியிருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரே ஆச்சர்யம். 

திரு புவனா

மேடைக்கு வந்ததும் மணமகள் பெரிய அகல்விளக்கொன்றில் தீபம் ஏற்ற, நாதஸ்வரம் இசைக்க, பெரியவர் ஒருவர் திருக்குறள் வாசித்தார். உடன் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்ட, தொடர்ந்து மணமகள் மணமகனுக்குத் தாலி கட்டினார். அங்கிருந்த மொத்தக் கூட்டமும் வியப்புடன் விழிகள் விரிக்க, மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து அன்பு பரிமாறினார்கள். மணமகள் தாலிகட்டியது மட்டுமல்ல, திருஞானசம்பந்தம் - புவனா காதல் ஜோடியின் இந்தத் திருமணத்தில் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. புது மணமக்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்தோம். 

பறை

“நான் பாண்டிச்சேரியில பிறந்து வளர்ந்த பையன். சின்ன வயசுல இருந்தே எனக்கு தமிழ்னா அவ்வளவு பிரியம். அதேபோல பறை இசையும் மிகப் பிடிக்கும். ஒருமுறை பறை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை போயிருந்தேன். அங்கதான் என் தோழியின் தோழியாக புவனா அறிமுகமானாங்க. சென்னை பொண்ணு, இங்கிலாந்துல வேலை பார்த்துட்டு இருந்தாங்க. மூணு மாசம் விடுமுறையில சென்னைக்கு வந்திருந்தப்போதான் எங்களோட சந்திப்பு. அன்னைக்கு அவங்களைப் பார்த்ததுமே, இவங்க என் வருங்கால மனைவியா வரணும்னு மனசுக்கு ஆசை வந்துடுச்சு'' என்று திரு பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு வெட்கப் புன்னகையோடு அவரை இடைமறித்து புவனா பேசுகிறார். 

பல்லக்கு

“எனக்கு முதல் சந்திப்பிலேயே மேஜிக் எல்லாம் நடக்கல. அந்தப் பறை நிகழ்வில் ஒருமுறை இவரைப் பார்த்ததோட, இங்கிலாந்துக்குத் திரும்பிட்டேன். ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பினார். தொடர்ந்து பேசினோம். திடீர்னு ஒருநாள், 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேட்டார். 'இந்தப் பசங்களே இப்படித்தான்'னு நினைச்சுட்டு, 'யோசிச்சு சொல்றேன்'னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் துளியும் காதல் இல்லாம, தூய்மையான நட்போட மட்டுமே அவர் பழகின விதம்தான் என்னை இம்ப்ரஸ் பண்ணுச்சு. 'சரி ஓகே சொல்லலாமா?'னு நான் யோசிச்சிட்டு இருந்த வேளையில, அவர் வீட்டில் என்னைப் பற்றித் தெரியவர, அவங்க நேரா  எங்க வீட்டில் போய் பேசி, கல்யாணத் தேதியைக் குறிச்சிட்டாங்க. 'என்னடா இது... நாம ஓ.கே சொல்றதுக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சிடுச்சே'னு நினைச்சுட்டே, கல்யாணத்துக்காக இந்தியா கிளம்பி வந்தேன். வந்ததும்தான் தெரிஞ்சது அவர் எங்க கல்யாணத்துக்காக எவ்வளவு ஏற்பாடுகள் செய்து வெச்சிருந்தாருன்னு'' என்றவரைத் தொடர்ந்தார் திரு. 

புவனா

''எங்க கல்யாணத்துல முதல்ல சாதி, மத அடையாளம் இருக்கக்கூடாதுனு முடிவு பண்ணினேன். அதேபோல தமிழ் சார்ந்தும், பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தர்ற வகையிலும் இந்தத் திருமண நிகழ்வு இருக்கணும்னு விரும்பினேன். திருமண பத்திரிகையை பனை ஓலையில் அச்சடிச்சோம். அடுத்தது, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளின் மண்ணையும் எடுத்து வந்து மணமேடையில் குவித்து, அந்தந்த நிலம் சார்ந்த பூக்கள் கொண்டு அலங்கரித்து, அதில் ஐந்து அகல்விளக்குகள் வைத்தோம். பல்லக்கில் வந்து இறங்கின புவனா  அந்த விளக்குகளை ஏற்றினாங்க. 

திருமாங்கல்யம்

திருமணத்தின் சிறப்பம்சம், புவனாவின் புடவையும் தாலியும்தான். புடவையின் ஓரங்களில் தமிழ் கலைகளும் உடல் பகுதியில் தமிழ் வட்டெழுத்துகள் தொடங்கி வழக்கில் உள்ள தமிழ் எழுத்துகளும், முந்தானையில் பெண்கள் பறையிசைக்கும், சிலம்பம் ஆடும் காட்சிகளும் நெய்யப்பட்டிருக்கும். என்னோட தோள்  துண்டில் சங்ககால கல்வெட்டுகளி்ல் இருக்கும் தமிழர் பண்பாடு சார்ந்த சுவடுகள் வரையப்பட்டிருக்கும். அதேபோல தாலி 'அ' வடிவிலும், அதில் ஒரு கரு உள்ளதுபோன்றும், அதன் மேல் ஓர் ஆண், பெண் உருவமும் இருக்கும். 

மணமேடையில நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தாலி கட்டிக்கிட்டதையும், மெட்டி மாட்டிக்கிட்டத்தையும் விருந்தினர்கள் வியந்தும், ரசித்தும் பார்த்தாங்க. சிலர், 'நீ ஒரு ஆம்பள. நீ போய் தாலி கட்டிக்குறியே?'ன்னு கேட்டப்போ, அங்தான் நாங்க ஜெயிச்சதா உணர்ந்தோம். ஆமாம், ஆண் என்ற கர்வத்தை உடைக்கிறதுக்கான முயற்சிதான் இது. எங்கிட்ட கேலியா, கோபமா கேட்டவங்க எல்லோரும் அப்புறம் கண்டிப்பா இதைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பாங்கனு நம்பினேன். அதேபோல, அடுத்த நாளே போன் பண்ணி என்னைப் பாராட்டினவங்க பலர். அடுத்ததா, வந்திருந்த எல்லோருக்கும் விதைகளை பரிசா கொடுத்து அனுப்பினோம். 

எங்களால் முடிந்த சிறு விதையை இந்த சமூகத்தில் விதைத்திருக்கோம். அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த விதை வளர்ந்து வரணும். நிச்சயம் வளரும்ங்கிற நம்பிக்கை எங்க ரெண்டு பேருக்குமே இருக்கு” என்ற திருவின் கைகள் கோக்கிறார் புவனா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close