வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (04/07/2017)

கடைசி தொடர்பு:21:43 (04/07/2017)

ஜி.எஸ்.டியால் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு கூடுதல் செலவு எவ்வளவு? #GST

`கடை என்னுடையது; உழைப்பு என்னுடையது; முதலீடு என்னுடையது; திறமை என்னுடையது; எல்லாச் செலவும் செய்தபிறகு என்னுடைய லாபம் 10%. ஆனால், எந்த வேலையும் செய்யாத அரசுக்கு ஜி.எஸ்.டி-ல் (GST) 28%, வருமான வரியில் 30% என மொத்தம் 58% வரி செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கத்திடம் ஒரே வேண்டுகோள், என் லாபத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கு வரியை மட்டும் கொடுத்துவிடுங்கள்' எனச் சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டு இருந்தார். இது உண்மையில் நியாயமான கேள்வியும், கோரிக்கையும் கூட. 

ஜிஎஸ்டி, செலவு, வரி, GST

ஏனெனில் என்னதான் ஜி.எஸ்.டி பலதரப்பட்ட வரிகளுக்குப் பதிலாக `ஒரே நாடு ஒரே வரி' என்று இருந்தாலும் ஜி.எஸ்.டி-ல் 28%, வருமான வரி 30% என ஒரு சில தொழில்களுக்குச் செலுத்த வேண்டியுள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு லாபத்தை விட வரி விகிதம்தான் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, ஜி.எஸ்.டி-ல் பட்டாசு உற்பத்திக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டினால் 30% வருமான வரி செலுத்த வேண்டும். அதனுடன் ஜி.எஸ்.டி-யும் சேர்த்தால் மொத்தம்  58% வரை வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு வரி உயர்கிறது பிரச்னையென்றால், நுகர்வோர்களுக்கு, சாமானியர்களுக்கு ஜி.எஸ்.டி-யால் சரக்கு மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கிறது என்பது பிரச்னை.

ஜி.எஸ்.டி-யால் ஒரு சில பொருள்களின் விலை குறைகிறது; அதேசமயம் சில பொருள்கள் மற்றும் சேவைகள் விலை உயர்வடைகிறது. இந்த நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பொதுவாக ஜி.எஸ்.டி-யால் ஒரு ஆண்டுக்குக் கூடுதலாக எவ்வளவு செலவு ஆகும்; ஜி.எஸ்.டி-க்கு முன், பின் சரக்கு மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை என்பதை ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாரயணனிடம் கேட்டோம்.

"ஜி.எஸ்.டி-யால் இனி மேல் ஏசி இல்லாத உணவகங்களில் சாப்பிட்டால் செலவு குறையும்; இதுவே ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டால் மட்டுமே செலவு அதிகரிக்கும். 1,000 ரூபாய்க்குக் கீழ் உள்ள தங்கும் விடுதியில் தங்கினால் செலவு குறையும். உதாரணத்துக்கு, இதற்கு முன் தங்கும் விடுதிகளில் 1,000 ரூபாய்க்கு உள்ள அறைகளில் தங்குவதற்கு 10% ஆடம்பர வரி அதாவது 100 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டியது இருந்தது. இப்போது இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவே 1,000 ரூபாய்க்கு மேல் உள்ள அறைகளில் தங்கினால் மட்டுமே ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியுள்ளது. இதேபோல ரயிலில் இரண்டாம் தர பயணத்தின் போது எந்த வரியும் இல்லை. இதுவே ரயிலில் முதல் தர வகுப்பு அல்லது ஏசி வகுப்புகளில் பயணம் மேற்கொண்டால் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது" என்றவர் ஜி.எஸ்.டி-யால் ஆண்டுக்குக் கூடுதலாக எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் அட்டவணையாகத் தந்து உதவினார். 

GST Table

மேலே குறிப்பிட்ட அட்டவணை மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.38,812 வரை செலவாகிறது. இதில் 1,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆயத்த ஆடைகள், பேஸ்ட், பிரஸ், ஆயில், ஆபரணங்கள், டிவி, மரச்சாமன்கள் மற்றும் கார் போன்றவற்றின் விலை வரியால் அதிகரிக்கும். எனினும் இனி வரும் நாள்களில் இவற்றின் விலை குறையும்" என்றார் அவர். 

ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயராது; வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்கின்றனர் ஆளும் அரசியல்வாதிகள். அதே நேரத்தில் ஜிஎஸ்டி-யால் ஆறு மாதம், ஒரு வருட காலத்துக்கு விலைவாசி உயரும்... அதன் பிறகு படிப்படியாக விலைவாசி குறையும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், `ஒரு சில மாதங்களில் விலைவாசி அதிகரிக்கும். அதன் பிறகு அதுவே பழகிடும்' என்று நக்கலடிக்கின்றனர் நம்மவர்கள். 

உண்மையில் ஜி.எஸ்.டி-ன் பயன் மக்களைச் சென்று அடைய வேண்டும். அது தான் மிகவும் முக்கியம். ஆனால், எந்த வரி வந்தாலும் போனாலும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் மாறுவதே இல்லை. ஒரு முறை விலைவாசி ஏறினால் அது இறங்கியதாகச் சரித்திரம் உள்ளதா?


டிரெண்டிங் @ விகடன்