வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (05/07/2017)

கடைசி தொடர்பு:16:00 (05/07/2017)

'மோடி ஒரு பலவீனமான பிரதமர்!'- அமெரிக்கப் பயணத்தை விமர்சித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'இந்தியாவுக்கு ஒரு பலவீனமான பிரதமர் இருக்கிறார்' என்று பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்துள்ளார். 

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை நேரில் சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமெரிக்க தரப்பில், 'ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் சய்யத் சலாவுதீன், இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு- காஷ்மீர் பகுதியில் பல நாசவேலைகளை நிகழ்த்தியுள்ளார்' என ஆவணம் ஒன்றில் குறிப்பிட்டது.

ராகுல் காந்தி

இப்படி காஷ்மீர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அமெரிக்கா கருத்து கூறியதற்கு அப்போதே கண்டனங்கள் எழுந்த நிலையில், இதுவரை வெளியுறவுத்துறை அமைச்சகமும் எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் அமெரிக்கா சொன்னதை ஏற்றுக்கொள்வதைப்போல் நடந்துகொண்டது. மேலும், அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட மோடி, ஹெச்1பி விசா குறித்து நிலவும் பிரச்னையைப் பற்றி ட்ரம்ப்பிடம் பேசி சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்கப் பயணத்தில் இந்த விஷயத்தைப் பற்றி மோடி எங்குமே பேசவில்லை. 

இதையடுத்து ராகுல் காந்தி, இந்த இரண்டு விஷயங்களை விமர்சனம் செய்து அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ட்வீட் செய்துள்ளார். அவர் மேலும் இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி, 'இந்தியாவுக்கு இப்போது ஒரு பலவீனமான பிரதமர் இருக்கிறார்' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.