Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின் தடை... கந்து வட்டி... இப்போது ஜிஎஸ்டி! - கலங்கும் நெசவாளர்கள்

ஜி எஸ் டி வரியை எதிர்த்துப் போராட்டம்

''உடுத்த  ஆடையே இல்லாத நிலையில் வாழ்ந்துவரும் இந்திய நெசவாளர்களின் கோவணத்தையும் உருவும் நிலையாக இருக்கிறது  ஜிஎஸ்டி வரி விதிப்பு'' என்று அலறுகிறார்கள் ஜவுளித் தொழில்முனைவோர். ஜிஎஸ்டி-யை எதிர்த்து ஜவுளித் தொழில் சார்ந்த கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனம், அசோசியேஷன் ஆஃப் ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் போன்ற அமைப்பினர் ஒன்றுசேர்ந்து சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.  வரும் 6-ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தையும் அறிவித்திருக்கிறார்கள்.  

இதுபற்றி அசோசியேஷன் ஆஃப் ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸின் பொதுச் செயலாளர் சண்முக சுந்தரம் பேசும்போது, ''இந்தியா நெசவாளர்கள் நிறைந்த நாடு. இங்கு ஜவுளித் தொழில் பல்வேறு  நிலைகளில், பலதரப்பட்ட நெசவாளர்களின் கடின உழைப்பினால்தான் ஆடை தயாரிக்கப்படுகிறது. இம்மக்களின்  வாழ்வாதாரமே இத்தொழிலை நம்பித்தான் இருக்கிறது.

வடநாடுகளில், ஓர் ஆலைக்குள் பஞ்சை அனுப்பினால், அந்த தொழிற்சாலைக்குள்ளேயே அனைத்துப் பிராசஸர்ஸிங்கும் முடிந்து வெளியே ஆடையாகவே வந்துவிடுகிறது. ஆனால்,  தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, ஜவுளித் தொழிலின் ஒவ்வொரு பிராசஸர்ஸிங்கும்  சிறு குறு தொழிலாக ஒரு பகுதியில் நடைபெற்று மீண்டும் மற்றொரு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உதாரணத்துக்குப் பருத்தியில் இருந்து வெளிவரும் பஞ்சை சுத்தப்படுத்தி நூலாகத் திரிப்பது ஒரு பகுதியிலும், திரிக்கப்பட்ட நூல் சைசிங் செய்யப்படுவது மற்றொரு பகுதியிலுமாக நடைபெறுகிறது. பின்னர் சைசிங் செய்யப்பட்ட நூல் தறியில் ஆடைகளாக நெய்யப்படுவது, நெய்யப்பட்ட துணியில் பிலிஜிங், டையிங், பிரிண்டிங் போன்ற வேலைப்பாடுகள் செய்வது என அனைத்து பிராசஸர்ஸிங்கும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று இறுதியில் அழகான ஆடையாக விற்பனைக்கு வருகிறது.

உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் கடையடைப்பு

இப்படி ஜவுளி உற்பத்தியில் நடைபெறும் ஒவ்வொரு நிலைக்கும் 5 சதவிகித ஜிஎஸ்டி வரி  விதித்திருக்கிறார்கள். இதனால் எங்கள் தொழிலே அழியும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  அதனால் இதைக் கடைப்பிடிக்க முடியாது. நடைமுறைச் சிக்கலும் இதில் அதிகமாக இருக்கும். ஒரு பிராசஸர்ஸிங் முடிந்ததும் இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது வரி ஆய்வு செய்வார்கள். இதனால் மூலப்பொருள்களைக் கொண்டு செல்வதில், கால தாமதம் ஏற்படுவதோடு லஞ்ச லாவண்யமும் அதிகரிக்கும்.  

ஒரே இடத்தில், அனைத்துப் பிராசஸர்ஸிங்கும் நடைபெறும்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த பிரச்னை இல்லை. அதனால் கார்ப்பரேட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் துணிகளின் விலை குறைவாகவும், சிறு குறு தொழிலாக தயாரிக்கப்படும்  எங்களுடைய துணிகளின் விலை அதிகமாகவும் இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களோடு எங்களால் போட்டியிட முடியாது.

அதனால், பொதுமக்கள் பெரிய நிறுவனங்களின் துணிகளையே வாங்குவார்கள். எங்களுடைய தயாரிப்புகளை வாங்க மாட்டார்கள். தொழில் முடங்கிப்போகும். காலப்போக்கில் தொழில் அழிந்துவிடும். இதனால் உள்ளூரில் உள்ள  பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.  அந்நிய நாட்டின் கார்ப்பரேட் நிறுவனத்தில் அடிமைகளாக வேலைக்குச் சேரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.  மீண்டும் அடிமை இந்தியா உருவாகும்'' என்றார்.

இதுகுறித்து டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பழனிசாமியிடம் பேசியபோது, ''ஏற்கெனவே ஜவுளித்தொழில் நலிவுற்று அழியும் தறுவாயில் இருக்கிறது. இளைய தலைமுறைகள் இத்தொழிலுக்கு வருவதில்லை. வயதில் மூத்தவர்கள்தான் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இத்தொழிலில் உள்ள படிப்பறிவு இல்லாத பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய வீடுகளில் இரண்டு, மூன்று தறிகளைப் போட்டு அதில் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில்தான் ஜீவனம் செய்துவருகிறார்கள்.

கடையடைப்பு

'ஒவ்வொரு தறிப் பட்டறையிலும் கம்ப்யூட்டர் வைத்திருப்பதோடு அதை செயல்படுத்துவதற்கென  ஒரு ஆபரேட்டரையும் நியமித்து அவருக்கு மாதம் 15,000 ரூபாய் சம்பளமாகக் கொடுத்து, வரவு செலவு கணக்குகளைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து  மாதம் 3 முறை வரவு செலவு விபரம் காண்பிக்க வேண்டும்' என்று ஜிஎஸ்டி-யில் சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.  

மின் தடை, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தொழில் அழிந்துகொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில்,  இப்படிப்பட்ட வரிகளையும் விதித்து ஒட்டுமொத்தமாக நெசவுத் தொழிலுக்கே சாவு குழி பறித்திருக்கிறார்கள். இது, இந்தியாவில்  சிறு குறு தொழிலை அழித்து கார்ப்பரேட் நிறுவனத்தை வளர்ச்சி அடையச் செய்யும் வழியாகவே தெரியவருகிறது. அதனால், இந்த ஜவுளித் தொழிலுக்கு வரி விலக்கு வேண்டும். முன்பை போல நூலுக்கு மட்டும் வரி விதிக்கவேண்டும். இல்லையேல் மாநிலம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் செய்வோம்'' என்றார்.

இதுபற்றி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும்போது, ''இது என்னுடைய கவனத்துக்கு வந்தது. இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்யும். உடனே முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்து ஜிஎஸ்டி கவுன்சில் கூடும்போது ஜவுளித் தொழிலாளர்களின் கோரிக்கையை எடுத்துரைப்போம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close