வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (06/07/2017)

கடைசி தொடர்பு:12:49 (06/07/2017)

புதுச்சேரியை நினைவுப்படுத்துகிறதா மேற்கு வங்க ஆளுநர் - முதல்வர் அதிகாரப்போட்டி?

மம்தா பானர்ஜி - முதல்வர்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே பதவிக்கு வந்தநாளில் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது, இதுபோன்றதொரு ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதல், மேற்குவங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. "மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார்" என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்புக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியா என்ற இடத்தில் நடந்த மதரீதியிலான மோதல் குறித்து ஆளுநர் கே.என்.திரிபாதியை பி.ஜே.பி பிரிதிநிதிகள் குழுவினர் சந்தித்துப் பேசினர். இதைத்தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்புகொண்டு ஆளுநர் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, "ஆளுநர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டும்தொனியில் பேசினார். பி.ஜே.பி-க்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் ஆளுநர் பேசியது எனக்கு மிகுந்த  அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பதவியில் இருக்கும் நீங்கள் இவ்வாறு பேசக் கூடாது என நான் தெரிவித்தபோதிலும், அவர் அதை ஏற்காமல் தொடர்ந்து பேசினார். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து, ஆளுநர் எப்படி என்னிடம் கேட்க முடியும்? என்னைத் தேர்ந்தெடுத்தது மக்கள்தானே தவிர, ஆளுநர் அல்ல" என்று குறிப்பிட்டார்.

மம்தாவின் இந்தப் பேட்டி குறித்து ஆளுநர் கே.என். திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.அதில், “முதல்வரிடம் எதுவும் பேசவில்லை. அவரின் மனம் வருந்தும்படியோ அல்லது அவமானப்படும்படியோ எந்தக்கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை" என்று மறுத்துள்ளார். 

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்துக் குடும்பங்களை 2,000 மூஸ்லிம்கள் சேர்ந்து  தாக்கியதாகவும், கட்சி அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்தியதாகவும் பி.ஜே.பி. குற்றம்சாட்டியுள்ளது. 'இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட வேண்டும்' என மேற்குவங்க பி.ஜே.பி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் உள்துறை அமைச்சகத்திற்கு பி.ஜே.பி-யினர் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகவே மேற்குவங்க ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

கலவரத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள்

இதற்கிடையே, சமூக வலைதளங்கள் மூலமாக பதிவுகள் வெளியிட்டதாலேயே வன்முறை ஏற்பட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும்விதமாக, பிரோபித் முகமது என்ற மாணவரை வன்முறையைத் தூண்டும்வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறி போலீஸார் கைது செய்துள்ளனர். பதுரியாவில் பதற்றமான சூழல் நிலவிரும் நிலையில், 'சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பதிவிடக்கூடாது. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கொல்கத்தா போலீஸார் எச்சரித்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஜூன் 6-ஆம் தேதி மத்திய அரசு, துணை ராணுவப்படையினரை மாநில அரசு கேட்காமலேயே அனுப்பி வைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைதான், முதல்வர் மம்தா பானர்ஜியை கொதிப்படையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மம்தா பானர்ஜி - கேசரிநாத் திரிபாதி இடையே ஏற்பட்டுள்ள மோதல், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர்  நாராயணசாமிக்கும் இடையே எழுந்துள்ள மோதலை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறியுள்ளனர். 

புதுச்சேரியில்தான் அதிகாரப்போட்டி என்றால், மேற்குவங்க மாநிலத்திலுமா அதிகாரப் போட்டி? என அவர்கள் கேள்விஎழுப்பியுள்ளனர். இதுபோன்ற ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகாரப் போட்டியின் பின்னணியின் வேறு காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.


டிரெண்டிங் @ விகடன்