“தமிழர் பெருமிதம் பேசும் கேரளா!” - வயநாடு பயணமும், அரசியலும் | Wayanad Trip and Understanding the Kerala Politics

வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (06/07/2017)

கடைசி தொடர்பு:08:54 (06/07/2017)

“தமிழர் பெருமிதம் பேசும் கேரளா!” - வயநாடு பயணமும், அரசியலும்

வயநாடு

'ஒவ்வொரு  மனுசனுக்கும் ஒவ்வொரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கு' -இது, குருதிப்புனல் படத்தில் கமல் பேசிய பிரபலமான வசனம்.  உண்மைதான். பரபரப்பான பத்திரிகையாளர் பயணத்தில், ஒரு பிரேக்கிங் பாயின்ட்டாக, எளிய இளைப்பாறலாக, குடும்பத்துடன் சுற்றுலா சென்றேன். கோழிக்கோடு நோக்கி, வேகமெடுத்தது தொடர்வண்டி. ஜன்னலோர இருக்கையில் என்னைக் கடந்து செல்லும் மரங்களும், செடிகளும், காட்சிகளும் பால்ய காலத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. ''விளையாடப் போனாலும் ஒரு கட்டுப் புல்லுக்கட்டோடு திரும்பனும்டா மகனே'' என்று என்னுடைய அம்மா போதித்தவை என் காதுகளில் ஒலித்தது. கிராமப் பின்னணியில் வளர்ந்த எனக்கு, இது பசுமரத்தாணி போலப் பதிந்த போதனை. இதோ, இந்தச் சுற்றுலா சுகத்தோடு ஒரு அரசியல் கட்டுரையையும் சுமந்து திரும்பினேன்.

'விண்ணைத்தொடும் மலை முகடுகள், எங்கு திரும்பினாலும் பசுமை. காதல் உறவொன்று காது மடலை வருடும் இதமாய் மலை முகடுகளைப் பனி வருடிக்கொண்டிருந்தது. தமிழ் இலக்கிய மாந்தர்கள் போன்று நீண்ட கூந்தலாக வளைந்து சென்றன சாலைகள். மழலையின் புன்னகையாய் ஆங்காங்கே தென்படும் சிறு சிறு நீர்வீழ்ச்சி, உடலைத் தொட்டுச் சிலிர்க்கச் செய்யும் குளிர் காற்று. நாசிக்குள் புகுந்து இதயம் வருடும் இயற்கையின் மனம் என 'வயநாடு' நம்மை வேறொரு புது உலகத்துக்குக் கொண்டு சென்றது.  

வயநாடு என்றில்லை, ஒட்டுமொத்த கேரளாவின் முகமும், இயற்கையால் வசீகரிக்கப்பட்டவை. அதனால்தான் "எங்கள் நாடு 'கடவுளின் சி.எம் பினராயி விஜயன்தேசமாகப் புகழப்படுகிறது" என்றார் நம்மை கோழிக்கோட்டில் இருந்து வயநாடுக்கு அழைத்துச் சென்ற வேன் டிரைவர் அமீர். ஆம், அற்புதமான கடவுளின் தேசத்தைத்  இப்போது கம்யூனிஸ்டுகள் ஆளுகிறார்கள். தமிழ்நாட்டைப் போலவே ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டில் நடைபோடுகிறது ஆட்சி.  இந்த ஓராண்டை, வயநாடுவாசிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? 

''மலபார் மாவட்டத்தில், பினராயி என்ற ஊரில் பிறந்தவரே எங்கள் சி.எம் பினராயி விஜயன். இப்போ அது கண்ணூர் மாவட்டமா மாறியிருக்கு. எங்க பக்கத்து மாவட்டம்னாலும் எங்களுக்கும் அது பெருமைதான்'' என்றார் கல்பட்டா பகுதியில் எதிர்ப்பட்ட குடை விற்பனையாளர். கலர், கலராக மினுக்கும் குடைகள் இரண்டை வாங்கிக்கொண்டு, மீன்முட்டி நீர்வீழ்ச்சி நோக்கி நகர்ந்தேன்.

நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் மாணவ சமூகத்துக்கு மட்டும் குறைந்த நுழைவுக் கட்டணம் வாங்கப்பட்டது. ''மாணவ சமூகத்தின் மீதான கரிசனம்'' என்ற அலுவலரிடம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும் இப்போதைய சி.பி.எம் ஆட்சிக்குமான வேறுபாடுகள், அரசியல் குறித்தெல்லாம் கேட்டேன். ''இவ்வளவு கேள்வி கேட்கிறீரே ? நீங்கள் யார் ?''என்றார். ''பத்திரிகையாளர்'' என்றபோது ஆச்சர்யத்துடன் கையைப்பிடித்து வாழ்த்தியவர், ''பத்திரிகையாளர் என்று மட்டுமில்லை, எழுத்தாளர்களிடமும் நாங்கள் கட்டணம் வாங்குவதில்லை. எங்கள் கேரளா பற்றி எழுதும்போது அதன் சிறப்பை எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று நுழைவுக் கட்டணத்தை மறுத்துவிட்டார்.

அதன்பிறகு சில மணித்துளிகள் வைக்கம் முகமது பஷீர், மாதவிக்குட்டி என்று அளவளாவிவிட்டு அங்கிருந்து எடக்கல் குகைக்குப் பயணித்தேன். கொட்டும் மழையைக் கிழித்தபடி வேன் முன்னேற ''சேட்டா செம்ம மழையில்ல'' என்றேன் டிரைவரிடம். "கடந்த ஒருவாரமா இதைவிட மோசமா மழை பெஞ்சு பயங்கர வெள்ளம்" என்றார். "அப்படின்னா ஊர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கணுமே, அதற்கான  சுவடே இல்லையே '' என்றேன் 2015- ம் ஆண்டு சென்னை வெள்ளப் பாதிப்பை நினைத்தபடியே. "இது சுற்றுலாப்  பகுதி என்றாலும் தேவையை மீறி யாரும் ரிசார்ட் கட்டிவிட முடியாது. முந்தைய காங்கிரஸ் அரசும் இதைக் கண்காணித்தாலும், இப்போதைய கம்யூனிஸ்ட் அரசு, கூடுதல் கவனத்தோடு இருக்காங்க. தேவையில்லாத இடங்களை அபகரிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. வாய்க்கால்களும் முறையாகப் பராமரிக்கப்படுது. அதனால தண்ணீர் , வெள்ளமாகத் தேங்காமல் விரைவாக வடிந்துவிடுகிறது" என்றார். ஏனோ அந்த நேரத்தில் சுமார் 75 ஏரிகளை விழுங்கிவிட்டு, நகரமாக மாறிய சென்னை என் நினைவுக்கு மீண்டும் வந்து சென்றது. பழைய கற்காலத்தின் வரலாற்றுப் பதிவான எடக்கல் குகையைக் கேள்விப்பட்டு அங்கே பயணத்தை நீட்டினேன்.

எடக்கல் குகை சித்திரங்கள்

உயர்ந்த செங்குத்தான இரண்டுமலைகளுக்கு இடையில் பிரமாண்டமான ஒற்றைக் கல் சிக்கியபடி இருந்தது. அந்த வானுயர பாறைகளில் பிராமி எழுத்துகள் காட்சி தந்தன. “இந்தக் குகை, 1890 ம் ஆண்டு, இந்த மலபார் மாவட்டத்தின் எஸ்.பி-யாக இருந்த பிரெட் பாவ்கெட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பே இந்தக் குகை குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கின. இடையில் சிக்கியுள்ள இந்தக் கல், என்பது சுமார் 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில், உயர்ந்த மலை முகடாக இருந்த கல், கீழ்நோக்கி வீழ்ந்து, இங்கே இந்த இரு மலைக்கு இடையில் சிக்கிக்கொண்டது. இந்தக் குகைப் பாறையில் இடம்பெற்றுள்ள சித்திரங்கள், ஹரப்பாவில், சிந்து சமவெளி நாகரிகம் குறித்த தொல்பொருள் ஆராய்ச்சியிலும் கண்டெடுக்கப்பட்ட சித்திரங்களுடன் ஒத்துப்போயுள்ளன. ஒரு ஜாடியுடன் உள்ள மனிதனைப் போன்ற சித்திரம், ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட சித்திரத்தோடு இணைந்துப்போகிறது. இது ஆரியர்களுக்கும் முந்தைய, பண்பாட்டை பிரதிபலிக்கும் பாறை. இந்தப் பிராமிச் சித்திரங்களில் தென்படும் தேர்ச் சக்கரங்கள், ஒரு கட்டமைப்போடு வாழ்ந்த தமிழர்களின் பண்பாட்டையும்,  தொன்மையையும் குறிப்பதாகும்’' என்று கேரளா மாநில தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் கைடு மற்றும் அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.

முத்தங்காடு

தமிழர் என்ற பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, அடுத்து பனசுரா அணைக்கு விரைந்தேன். பாட்டில் தண்ணீர் வாங்கிச் செல்பவர்கள் திரும்பி வரும்போது அந்த பிளாஸ்டிக்  பாட்டிலை கொடுத்தால் ஐந்து ரூபாய் திருப்பித் தருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இந்த நடைமுறை என்றார் அலுவலர்.

அணையில் இருந்து இறங்கி முத்தங்காடு சென்றேன். விலங்குகள் உள்ள காட்டில் ஜீப்பில் பயணித்தேன். புலி, சிறுத்தை, யானை மிகுதியாக உள்ள காட்டில் மான்களும் , காட்டெருமைகளும் மட்டும் எங்கள் கண்களில் பட்டன. "இவையெல்லாம் புலிக்கு உணவாகப் போகிறது " டைமிங் காமடி செய்தார்  ஜீப் ஓட்டுனர். தொடர்ந்து பேசியவர், "கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என மூன்று மாநிலங்களும் ஒன்று சேரும் காடு இது. புது ஆட்சியில் பெருசாக எந்தப் பிரச்னையுமில்லை என்றாலும் நாள் முழுக்க ஜீப் ஓட்டினாலும் வெறும் ரூ 150/- மட்டும்தான் எங்க தினக்கூலி. அதை உயர்த்தித் தர அரசு முயற்சிக்கணும்" என்றார் கோரிக்கையாக.

சிசி ஜெய்சன்,நீத்து ஜோசப், லிதின் கே.எஸ்

அங்கிருந்து ரிசார்ட்டுக்குத் திரும்பிய நம் கண்ணில் ஒரு கடைக்கு முன்பு நீண்ட வரிசையில், பெரும் கூட்டம் தென்பட்டது. "அது மதுபான பார். 'ஆட்சிக்கு வந்தால் பார்கள் திறக்கப்படும்' என்று வாக்குறுதி கொடுத்தபடியே, தற்போது பார்களுக்கு அரசு அனுமதி கொடுத்துடுச்சு. அதனாலதான் கூட்டம். எவ்வளவோ கூட்டமா இருந்தாலும் இங்க கேரளாவுல வரிசையில நின்னுதான் சரக்கு வாங்கணும் சேட்டா" என்றார் நம்ம அமீர், புன்னகைத்தபடி.

வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பேத்தரி, கல்பேட்டா, மனத்தவாடி என்று மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இருக்க, சுல்தான்பேத்தரி தொகுதி காங்கிரஸ் வசமும், ஏனைய இரண்டும் கம்யூனிஸ்டுகள் வசமும் உள்ளன. சிட்டிங் எம்.பி-யாக காங்கிரஸ் ஷாநவாஸ் இருக்கிறார். வயநாடு மாவட்டத்தில் வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வருவாய் தரும் சுற்றுலாத் தலம் என்பதால் ரிசார்டுகள் தொழில் பிரதானம். எனவே அங்கிருந்த ரிசார்ட்களில் பணியாற்றும் சிலரிடம் பேசினேன்.

 பனசுரா அணை

''எங்க சி.எம் பினராயி விஜயன் மேல எங்களுக்குத் தனிப்பட்ட பற்று இருக்கு. இங்க மலையாளிகள் பெரும்பாலும் பீப் சாப்பிடுவாங்க. சென்ட்ரல் கவர்ன்மென்ட் மாடுகள் வெட்டுவதற்கு தடை போட்டப்போ, ‘இப்படியே போனா நாளைக்கு மீன் சாப்பிடக் கூட தடைபோடுவாங்க'ன்னு சண்டை போட்டவர் எங்க சி.எம். சட்டமன்றத்துலயே பீப் தடைக்கு எதிராத் தீர்மானம் போட்டவர். அந்தத் தைரியம் எங்களுக்குப் பிடிக்கும்" என்றார் சிசி ஜெய்சன். "உண்மைதான். முந்தைய ஆட்சியைவிட இப்போது தண்ணீர், சாலை வசதிகள் மிகுதியாக உள்ளன. இந்த ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாக்குறுதிகளை நிறைவேற்றி வரார். எங்களுக்கு அவர் ஓ.கே. ஆனா இன்னும் சில விஷயம் எதிர்பார்க்கிறோம். இங்க ரிசார்ட்ஸ்களுக்கு சுற்றுலா வாசிகள் வந்தால்தான் வருமானம். நைட் 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை கர்நாடகா, தமிழ்நாடு பார்டர்கள் வழியாக உள்ளே வாகனங்கள் வரத் தடை உள்ளது. இதைத் தளர்த்த வேண்டும். இங்கே ரயில் போக்குவரத்துக்கு அனுமதித்தால் கூடுதலாக சுற்றுலாவாசிகள் வருவார்கள்" என்றார் நீத்து ஜோசப். ஆனால் இதை மறுக்கும் லிதின், " வனங்களைப் பாதுகாப்பது முக்கியம். எனவேதான், ரயில் போக்குவரத்துக்கு அனுமதிப்பதில்லை. அந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ளலாம். அதேநேரம், இதைவிடப் பெரிய சிக்கல் என்னவென்றால், மதுபான பார்கள் மீண்டும் திறந்துவிட்டார்கள். வருமானத்துக்காக திறந்துவிட்டதாக அரசு தெரிவித்தாலும் இதனால் பெண்களான எங்களுக்குத்தான் பிரச்னை. இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்ல பயமாக உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? பெண்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் அரசை விட முந்தைய காங்கிரஸ் அரசுதான் சிறப்பு " என்றவர் , "இதற்கு மாற்றாக பார்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கலாம் " என்றார் ஆலோசனையாக.

 வயநாடு

'சரி நீங்க எல்லோரும் இந்த ஓராண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு என்ன மதிப்பெண் கொடுப்பீர்கள் ?" என்றேன். "இன்னும் நாலு வருஷம் இருக்குன்னாலும், இந்த ஒரு வருஷத்துக்கு மார்க் என்றால் 45  முதல்  50 மார்க் கொடுக்கலாம் " என்றனர் கோரஸாக.

இரவின் குளிரில் அற்புதமான ஒரு தேநீரைப் பருகியபடி, மக்களின் குரலை, நம் தொடர்பில் இருக்கும் தோழர் நித்தின் கணிச்சேரியிடம் பகிர்ந்தோம். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சி.சி உறுப்பினர். 

"காம்ரேட் , விகடன் மூலமாக வெளிப்படும் கருத்துகளை நிச்சயம் எங்க முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு போகிறோம். அதேநேரம், இந்த ஓராண்டு காலத்தில் பல கோரிக்கைகளை எங்கள் ஆட்சி நிறைவேற்றியுள்ளது. வயநாடு, பாலக்காட்டில் மட்டும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் சிலவற்றைச் சொல்கிறேன்" என்றவாறு பட்டியலிட்டார்.

"இதற்கு முன்பு இங்கு மின் தட்டுப்பாடு இருந்தது.இன்று பூரண மின்சாரம் வழங்கியுள்ளோம். கேரளாவில் வயநாடு மற்றும் பாலக்காடு இரண்டும்  மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாகும். எனவே, கம்யூனிஸ்ட் அரசு இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் எடுத்துவருகிறது. நிதின் காணிச்சேரி இங்கு பெரும்பான்மையாக வசிப்பவர்கள் பழங்குடி மக்கள். அனைவருக்கும் நிலம் உத்தரவாதப்படுத்தும் நோக்கில் வயநாடு முழுக்க மீண்டும் சர்வே எடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முன்பு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது. இப்போது பழங்குடியின ஆசிரியர்கள் உட்பட  400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 முதல் 30 பள்ளிகளுக்கு ஐந்து முதல் ஆறு  கோடி ரூபாய் வழங்கி அதை ஹை-டெக் பள்ளிகளாக மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு முடிவில் இந்த மாவட்டங்கள் மேலும் மெருகேறியிருக்கும்" என்றார் தோழமையோடு. 

நம்முடைய மூன்று நாள் சுற்றுலாவிலும் பொது இடங்களில் ஓர் இடத்தில் கூட குப்பைகளைப் பார்க்க முடியவில்லை. உடனுக்குடன் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகள் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுகின்றன. மலையாளம் இல்லாத ஒரு விளம்பரப் பலகை கூட பார்க்கமுடியவில்லை. முதலில் மலையாளத்திலும் அதற்கு கீழே ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் எழுதப்பட்டுருந்தன. கேரளா என்றாலும் எங்கு திரும்பினாலும் தமிழ் பாடல்கள் குறிப்பாக விஜய் பாடல்கள் ஒலித்தபடி உள்ளன. தமிழில் பேசினால் அன்போடு மலையாளத்தில் பதில் அளிக்கின்றனர். உரையாடல் என்பது அங்கே பிரச்னையாக இருப்பதில்லை. அதேநேரம் இதுவரை நாம் பாத்திராத,  நடிகர்களுக்கான கட்-அவுட்டுகள், ரசிகர் மன்ற போர்டுகள் இப்போது தென்பட்டன . இந்த மாற்றம், பண்பாட்டு மாற்றமாக மாறுமா என்று தெரியவில்லை. இயற்கையின் உன்னதத்தை அங்குள்ள ஒவ்வொரு மக்களும் புரிந்து வைத்துக்கொண்டு, இயற்கையின் இயல்புக்கு ஏற்ப தங்களைப் புதுபித்துக்கொள்கின்றனர். மொத்தத்தில் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா, கடவுளின் தேசமாகவே மிளிர்கிறது.


டிரெண்டிங் @ விகடன்